உங்கள் பான் எண் வைத்து வேறு ஒருவர் வங்கிக் கணக்குத் தொடங்கியிருந்தால்? அறியும் வழி!
உங்கள் பான் எண் வைத்து வேறு ஒருவர் வங்கிக் கணக்குத் தொடங்கியிருந்தால் எப்படி கண்டறிவது என்பது பற்றி..
நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் அட்டை என்பது, இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் நிதிசார்ந்த நடவடிக்கைகளுக்கான எண். இதைக் கொண்டுதான் வங்கிக் கணக்கு தொடங்குதல், முதலீடுகள், வரி செலுத்துவது போன்றவை செயல்படுத்தப்படுகிறது.
ஆனால், மக்களிடையே, இந்த பான் அட்டை பற்றி பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால், இதை வைத்து பல மோசடிகள் நடக்கின்றன.
Advertisement
Advertisement
இது அடையாள அட்டையாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், இதில் உள்ள விவரங்களைப் பயன்படுத்தி ஒருவரது அனுமதியின்றி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதன் மூலம் மோசடிகள் நடக்கும் அபாயம் இருப்பதால், அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தங்கள் பெயரில் இருக்கும் பான் அட்டையை வைத்து வேறு யாரும் வங்கிக் கணக்குத் தொடங்கவில்லை என்பதை ஒவ்வொருவரும் உறுதி செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம், எதிர்காலத்தில் வரி தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க, இத்தகைய மோசடிகளை முன்கூட்டியே கண்டறிவது அவசியமாகிறது.
வங்கிகள் தரப்பில் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொண்டாலும், இத்தகைய மோசடிகள் நடைபெறாமல் விழிப்புணர்வுடன் இருப்பதும் முக்கியமாகிறது.
இதனைக் கண்டறிய ஒரு வழி உள்ளது. 'படிவம் 26ஏஎஸ்' (Form 26AS) அல்லது ஒவ்வொருவரும் தங்களது 'ஆண்டு தகவல் அறிக்கை' ஆகியவற்றின் மூலம், பான் (PAN) எண்ணுடன் தொடர்புடைய நிதி நடவடிக்கைகளை நாமே சரிபார்த்துக் கொள்ள முடியும்.
ஒருவேளை, இந்த நிதி நடவடிக்கைகளில் வழக்கத்துக்கு மாறாக நமக்குத் தெரியாத நிதி நடவடிக்கைகள் இருந்தால் உடனடியாக அது பற்றி புகார் அளிக்க வேண்டும். உரிய வங்கியைத் தொடர்பு கொண்டு அல்லது வருமான வரித்துறை இணையதளத்தில் புகார் அளிக்க சிறப்புப் பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் புகார் அளிக்கலாம்.
பான் அட்டையை வேறு யாரும் பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்வது எப்படி?
மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாக இருப்பது கடன் அறிக்கையைப் பெறுவது.
கடன் வழங்கும் முகமை நிறுவனங்கள், தனி நபர்களின் அனைத்துக் கடன்கள் மற்றும் நிதித் தொடர்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை வழங்கி வருகின்றன.
அந்த அறிக்கையில் வழக்கத்திற்கு மாறான பதிவுகள் காணப்பட்டால், அது முறையற்ற பயன்பாட்டைக் குறிக்கக்கூடும்.
பான் அட்டையை பாதுகாக்க...
தேவையற்ற இடங்களில் பான் அட்டையைக் கொடுக்க வேண்டாம்.
நிதி சார்ந்த பயன்பாடுகளுக்கு மட்டுமே பான் அட்டையைக் கொடுக்க வேண்டும்.
தேவையற்ற எந்த இணையதளத்திலும், பான் அட்டை விவரங்களைப் பதிவு செய்ய வேண்டாம்.