20.8.1976: காவிரி நீர் பங்கீடு பற்றி 25ஆம் தேதி டில்லியில் பேச்சு
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
திருவனந்தபுரம், ஆக. 19 - காவிரி தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது சம்பந்தமாக இம் மாதம் 25ந் தேதி, புதுடில்லியில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் பேச்சு நடத்தும்.
கேரளத்தின் சார்பில் அதன் முதலமைச்சர் அச்சுதமேனனும் மின்சார அமைச்சர் எம்.என். கோவிந்தன் நாயர், பாசன அமைச்சர் கே. ஜி. அடியோடி ஆகியோரும் கலந்து கொள்வார்கள். மத்திய விவசாய பாசன அமைச்சர் ஜகஜீவன்ராம் இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
தமிழ்நாடு கவர்னர் சுகாதியாவும் அவருடைய ஆலோசகர்களும் பேச்சில் கலந்து கொள்வார்கள். கர்நாடகா சார்பில் அதன் முதலமைச்சர் அர்ஸும் சம்பந்தப்பட்ட மந்திரிகளும் கலந்து கொள்வார்கள்.
Advertisement
Advertisement
அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பமாகும் த.நா. பரிசு சீட்டு - பரிசுகள் விவரம்
திருச்சி, ஆக.19 - இந்த நிதி ஆண்டில் பரிசுச் சீட்டுக்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் முதல் ஒரு கோடி ரூபாய் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடி தண்ணீர் வசதி செய்து கொடுப்பதற்காகச் செலவிடப்படும். மீதமுள்ள தொகை ஹரிஜனங்களுக்கு வீட்டு மனைகள் வழங்குவதற்காகச் செலவிடப்படும்.
அரசாங்கம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு பரிசுத் திட்டத்தின் கீழ், முதல் குலுக்கல் அடுத்த மாதம் நடக்கும். அந்தக் குலுக்கலுக்கு "ஏ", "பி" என்ற இரண்டு வரிசைகளை வெளியிடும். ஒவ்வொரு வரிசையிலும் 10 லட்சம் டிக்கெட்டுகள் (நீர் 000000 லிருந்து 999999 வரை) இருக்கும். ஒவ்வொரு வரிசைக்கும் தனித்தனியாக கீழ்க் கண்ட பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு ரூ. ஒரு லட்சம். 2 இரண்டாம் பரிசுகள் - ஒவ்வொன்றும் ரூ. 10,000. 25 மூன்றாவது பரிசுகள் - ஒவ்வொன்றும் ரூ. 1000. 100 நான்காவது பரிசுகள் - ஒவ்வொன்றும் ரூ. 500. 500 ஐந்தாவது பரிசுகள்- ஒவ்வொன்றும் ரூ. 100. 2000 ஆறாவது பரிசுகள் - ஒவ்வொன்றும் ரூ. 50.
இவைகளைத் தவிர முதல் பரிசுக்கு முந்திய, பிந்திய எண்களுக்கு ஆறுதல் பரிசுகள் கீழ்க்கண்டவாறு உண்டு:
இரண்டு முதல் பரிசுகள் - ஒவ்வொன்றும் ரூ.1000. நான்கு இரண்டாவது பரிசுகள் - ஒவ்வொன்றும் ரூ 500.
ஆக மொத்தம் ஒவ்வொரு வரிசையிலும் மொத்தம் 2634 பரிசுகள் உண்டு. அவைகளின் மொத்த மதிப்பு ரூ. 3,49,000.
மாநில நிதி இலாகா காரியதரிசியின் மேற்பார்வையில் சிறு சேமிப்பு இயக்குநர் பரிசுத் திட்டத்தை நடத்துவார்.
அங்கீகாரம் பெற்ற ஏஜெண்டுகள் மூலம் பரிசுச் சீட்டுகள் விற்கப்படும்.
பரிசுச் சீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்ட போது யார், யார் ஏஜெண்டுகளாக இருந்தார்களோ அவர்கள் உரிய முன்பணத்தைச் செலுத்திவிட்டு மீண்டும் ஏஜெண்டுகளாகலாம். அவர்களை ஏஜெண்டுகளாக அனுமதிப்பது என்று அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.
ஏஜெண்டுகளுக்கு பதினொன்றரைச் சதவிகித கழிவுத் தொகை அளிக்கப்படும்.
20.8.1976: Talks on Cauvery water sharing in Delhi on the 25th.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.