16.6.1976: பிரிட்டனில் இன மோதல் - இந்திய அரசு கவலை
பிரிட்டன் இன மோதல் பற்றி இந்திய அரசு கவலை...
புது டில்லி. ஜூன். 15 - பிரிட்டனில் இன உறவுகள் சம்பந்தமான சமீபத்திய சம்பவங்களை இந்திய அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அந்நாட்டில் ஏற்பட்டுள்ள இன உறவு நெருக்கடி பற்றி இந்தியாவின் "கவலை" பல்வேறு வழிகள் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் டில்லியில் வெளிவிவகார இலாகா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில், இந்திய அரசாங்கம் லண்டனிலுள்ள இந்தியத் தூதரக மூலமும், டில்லியிலுள்ள பிரிட்டிஷ் தூதர் மூலமும் பிரிட்டிஷ் அரசுடன் தொடர்பு கொண்டுள்ளதென்றார்.
Advertisement
Advertisement
லண்டனிலுள்ள இந்தியத் தூதரகம் பிரிட்டனிலுள்ள இந்திய சமூகத்தினருடனும் தொடர்பு கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
புதுடில்லியில் இந்திய வெளிவிவகார செயலாளர் ஜே.எஸ். மேத்தா கடந்த வாரம் பிரிட்டிஷ் தூதரைச் சந்தித்து இன நெருக்கடியைத் தணிக்க அரசியல் மட்டத்திலான முயற்சிகளும், பயனுள்ள முன் முயற்சிகளும் தொடர்ந்து நீடிக்கும் என்று இந்தியா அரசு நம்புவதாகத் தெரிவித்தார்.
வேறு காரியமாகப் பிரிட்டனுக்குச் சென்றுள்ள இந்திய மந்திரிகளும் இந்திய சமூகத்தின் பொறுப்பான தலைவர்களைச் சந்தித்துள்ளனர். அத்துடன் பிரிட்டிஷ் அரசைச் சேர்ந்த மந்திரிகளைச் சந்தித்து தற்போதைய இன நெருக்கடி பற்றி இந்திய அரசின் கவலையைத் தெரிவித்துள்ளனர் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
லண்டனில் உள்ள இந்திய, பாகிஸ்தானி, வங்கதேஷ் ராஜதந்திர பிரதிநிதிகள் ஒருவரோடு ஒருவர் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளனர். இந்தியா ஹவுசில் அவர்கள் சந்தித்து கூட்டு அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
தமிழக மக்களிடமிருந்து கவர்னர் கே.கே. ஷா விடை பெற்றார்
சென்னை, ஜூன், 15 - கவர்னர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று கே.கே. ஷா இன்று சென்னையை விட்டுப் பயணமானார். சென்டிரல் ரயில் நிலையத்தில் அவருக்கு உள்ளத்தை நெகிழ வைக்கும் வகையில் வழியனுப்பு நடத்தப்பட்டது. "உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி கலந்த வணக்கம்" என்று இருகரம் கூப்பி, வணக்கம் தெரிவித்து ஷா விடை பெற்றார். சரியாக இரவு 7 மணி 25 நிமிஷத்துக்கு கவர்னர் ஏறிச் சென்ற ரெயில் புறப்பட்டபோது "கே.கே. ஷா வாழ்க" என்ற வாழ்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ...
... இதற்கு முன்பாக ராஜாஜி தலைமை மண்டபத்தை அடுத்துள்ள திறந்த வெளி மண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் வழியனுப்பு தேனீர் விருந்து நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி, நீதிபதி பி.எஸ். கைலாசம், இதர நீதிபதிகள், நகர ஷெரீப் ஆர். ராமகிருஷ்ணன், அரசியல் கட்சி தலைவர்களான கருப்பையா மூப்பனார், அனந்த நாயகி, சம்பத் (காங்.), வி. தண்டாயுதபாணி, எஸ். ராதாகிருஷ்ணன் (பழைய (காங்.), எம். கல்யாணசுந்தரம் எம். பி. (கம்யூ), கே.ஏ. கிருஷ்ணசாமி எம்.பி (அண்ணா தி.மு.க.), முன்னாள் அமைச்சர் சத்திய வாணிமுத்து (தா.மு.க.), ம.பொ. சிவஞானம் (மேலவைத் துணைத் தலைவர்), தமிழக மேலவை, பார்லிமெண்ட் உறுப்பினர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் சம்பத், செயலாளர் அனந்தநாயகி, முத்தையா செட்டியார் மற்றும் நகரப் பிரமுகர்கள் வந்திருந்தனர். ...
16.6.1976: Racial conflict in Britain – Indian government concerned.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.