10.9.1976: சீனத் தலைவர் மா-ஸே துங் காலமானார்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
பீகிங், செப். 9 - கம்யூனிஸ்டு சீனாவின் பிதாவான மா-ஸே துங் செப். 8 நள்ளிரவு 12.10க்கு (பீகிங் நேரம்) காலமானார். அவர் வயது 82. 16 மணி நேரத்துக்குப்பின் மரண செய்தி சீன மக்களுக்கு ஒலிபரப்பப்பட்டது.
75 கோடி சீன மக்களுக்கு ஒலிபரப்பிய செய்தியில் பீகிங் ரேடியோ கூறியதாவது:-
நோய் மோசமாகியதாலும், எல்லா மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டு பயனில்லாது போனதாலும் செப்டம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12-10 மணிக்கு மா-ஸே துங் காலமானார்.
Advertisement
Advertisement
இந்த செய்தி ஒலிபரப்பை அடுத்து மரண கீதம் இசைக்கப்பட்டது. உடனே பீகிங் மையத்தில் உள்ள பிரம்மாண்ட மானடியன் அன்மென் சதுக்கத்தில் (தெய்வீக அமைதி சதுக்கம்) கருப்புப் பட்டைகளை கைளில் அணிந்து கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
செய்தி அறிவிப்புக்கு முன்பு முக்ய தகவல் வரும் என ரேடியோவில் எச்சரிக்கப்பட்டது.
தொழிற்சாலைகளிலும், கடைகளிலும், குடியிருப்புகளிலும் ஒலிபரப்பிகள், ரேடியோ பெட்டிகள் முன்பு மக்கள் கூடினார்கள். மரண செய்தியை அறிந்ததும் அவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டது.
டிசம்பர் 26ம் தேதி 83 வயது நிரம்பவிருந்த மாவ் பல ஆண்டுகாலமாக உறுப்புகள் சுவாதீன மற்றிருந்தார்.
கடந்த சில மாதங்களில் அவர் நிலை மோசமாகி அந்நிய பிரமுகர்கள் அவரைச் சந்திப்பது ரத்து செய்யப்பட்டது.
சிறிது காலமாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பீகிங்கை வெடிகுண்டு போல மரண அறிவிப்பு தாக்கியது. தலைநகரில் எல்லா கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
பீகிங் தெருக்களில் செய்தி பரவியபோது பல ஆண்களும், பெண்களும் அழுதனர்.
இறுதி சடங்கில் அந்நியருக்கு அழைப்பில்லை
மா ஸே துங் 'இறுதிச் சடங்குகளுக்கு எந்த அந்நிய அரசு - பிரதிநிதி, எந்த சகோதரத்துவ கட்சிப் பிரதிநிதி, எந்த நட்புள்ள நபர் அழைக்கப்படமாட்டார் என்று கட்சி மத்தியக் கமிட்டி இன்று கூறியது. ...
பிரதமரின் தமிழக சுற்று பயணத்தில் சிறு மாறுதல் - காரிலேயே சென்று வறட்சி பகுதிகளைப் பார்வையிடுவார்
சென்னை, செப். 9- வறட்சி நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக தமிழகம் வரும் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் சுற்றுப்பயணத் திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. வியாழனன்று இரவில் தமிழக அரசு அறிவித்த மாறுதல் செய்யப்பட்ட சுற்றுப்பயணத் திட்டப்படி பிரதம மந்திரி திண்டுக்கல் செல்லமாட்டார். அங்கு பேசுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டமும் ரத்தாகிறது.
மாறுதல் செய்யப்பட்ட பிரதமரின் சுற்றுப்பயண நிகழ்ச்சி விவரம் குறித்து அரசின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விவரம் வருமாறு:-
தற்போது கிடைத்துள்ள வானிலை பற்றிய காலநிலை அறிக்கைப்படி தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் நிலவி வரும் வானிலை ஹெலிகாப்டர் பத்திரமாகப் பயணம் செய்வதற்கு வசதியானது அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வறட்சிப் பகுதிகளை பிரதமர் ஹெலிகாப்டரில் பயணம் செய்து பார்வையிடுவதாக முன்பு அறிவிக்கப்பட்டது இப்போது மாற்றப்படுகிறது. தமது சுற்றுப் பயணத்தின் போது வறட்சிப் பகுதிகளை காரில் சென்றே பிரதமர் பார்வையிடுவார்.
காரில் பயணம் செய்வதானால் எடுத்துக் கொள்ளக்கூடிய கூடுதலான நேரத்தைக் கருதி பிரதமர் பார்வையிடுவதாக இருந்த வறட்சிப் பகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. ...
10.9.1976: Chinese leader Mao Zedong passed away.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.