24.9.1976: சர்க்காரியா கமிஷன் விசாரணை - பில் பணம் பெற விமான கம்பெனிகள் முயற்சி, அதிர்ச்சி சாட்சியம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
சென்னை, செப். 23 - முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கமிஷன் கொடுப்பதற்காக ரூபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரத்தை வைத்து ஒரு கைப்பெட்டியில் அவரது அந்தரங்கக் காரியதரிசி வைத்தியலிங்கத்திடம் கொண்டு போய்க் கொடுத்ததாக நீதிபதி சர்க்காரியா முன் இன்று சாட்சியம் அளித்த ஏவிந்தியா விமானக் கம்பெனியின் நிர்வாக டைரக்டர் ஆர். ஹெச். காப்டன் கூறினார். இதை விட சற்று கூடுதலான தொகை அன்றைக்கு விவசாய இலாகா அமைச்சராகவிருந்த அன்பில் தர்மலிங்கத்திற்கு தரப்பட்டது என்றும் அவர் சொன்னார்.
நீதிபதி சர்க்காரியா முன், நேற்றுப் பிற்பகல் சாட்சியம் அளிக்கத் தொடங்கிய கேப்டன் இன்றும் தொடர்ந்து சாட்சியம் அளித்தார். அவர் சாட்சியம் அளிக்கத் தொடங்குவதற்கு முன்னதாக நேற்று அவர் அளித்திருந்த சாட்சியம் படித்து காண்பிக்கப்பட்டது.
விமானத்திலிருந்து பூச்சி மருந்து தெளிக்கும் திட்டத்திற்காக விமானக் கம்பெனிக்காரர்களை எவ்வாறெல்லாம் கசக்கி பிழிந்து கமிஷன் பெறப்பட்டது என்பதை காப்டன் தமது இன்றைய சாட்சியத்தில் விளக்கினார்.
Advertisement
Advertisement
"அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தைச் சந்தித்து கமிஷன் தொகை பற்றியும், பழைய பில்களுக்கான பணத்தைக் கொடுத்துக் கணக்கைத் தீர்ப்பது பற்றியும் பேசினோம். கமிஷன் ஏக்கருக்கு 90 பைசா கொடுக்க வேண்டும் என்றும் அதை இனி தாம் நியமிக்கப் போகும் கம்பெனிக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார். 90 பைசா கமிஷன் வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம் என்றும் 80 பைசா வீதம் கமிஷனை ஏற்றுக் கொள்ளும்படியும் கம்பட்டா அமைச்சரை கேட்டுக் கொண்டதோடு, ஏக்கருக்கு ரூ. 11 வீதம் கட்டணத்தை நிர்ணயிக்கும்படியும் வேண்டிக்கொண்டார். கட்டண உயர்வு சம்பந்தமாக பரிசீலனை செய்வதாகக் கூறிய அமைச்சர் இதுபற்றி விவசாய இலாகா காரியதரிசிக்கு தாக்கீது பிறப்பித்தார். ஆயினும் தாம் நியமிக்கப் போகும் ஏஜெண்டிடமே கமிஷன்தொகையைக் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக சொன்னார். ...
செவ்வாயில் ஒரே பனிக்கடல்: விஞ்ஞானி தகவல்
வாஷிங்டன், செப். 23 - செவ்வாய் கிரகத்தில் பூமியைக் காட்டிலும் அதிகத் தண்ணீர் இருக்கிறது என்பதை, வைக்கிங்-2 கருவிகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.
ஆனால் ஒரே ஒரு வேறுபாடு. அதனுடைய வடதுருவத்திலும் தென் துருவத்திலும் அவை பனிக்கட்டியாக உறைந்திருக்கின்றன. மேலும் மேற்பரப்புக்கு கீழே நிரந்தர உறைபனியாக இருக்கிறது.
செவ்வாயில் உள்ள பனிக் கட்டியெல்லாம் உருகினால், பூமியைப் போன்றே அங்கும் ஏரிகளும், ஆறுகளும், கடல்களும் சமுத்திரங்களும் இருக்கும்.
வைக்கிங் விஞ்ஞானியான பார்னி ஃபார்மர் இந்தத் தகவல்களைக் கூறினார்.
24.9.1976: Sarkaria Commission inquiry – Airline companies' attempt to collect bill payments; shocking testimony.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.