காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த ரான்விஜய் என்பவர் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளை பேட்டி எடுப்பதற்கும், அவர்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதை விசாரித்த நீதிபதிகள் எம்.பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிகளை நேர்காணல் காணவும், புகைப்படங்களை வெளியிடவும் ஊடகங்களை மத்திய அரசும், பிகார் அரசும் அனுமதிக்கக் கூடாது. முகத்தை மறைத்தும்கூட வெளியிடக் கூடாது. ஏற்கெனவே மன வேதனை அடைந்துள்ளவர்களை மீண்டும் மீண்டும் துயரத்தில் ஆழ்த்தக் கூடாது. பாதிக்கப்பட்ட சிறுமிகளை விசாரிக்க மனநல நிபுணர்களை விசாரணை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்ததுடன் இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
முசாஃபர்பூரில் அரசு நிதியுதவி பெறும் காப்பகம் ஒன்று நடத்தப்பட்டு வந்தது. அங்கிருந்த 30-க்கும் அதிகமான சிறுமிகளுக்கு காப்பகத்தில் இருந்தவர்களால் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. காப்பகத்தில் இருந்த 42 பேரில் 34 பேருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் இருவருக்கு மருத்துவ பரிசோனை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இதுதொடர்பாக 11 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.