FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உ.பி. காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை: 24 சிறுமிகள் மீட்பு; 18 சிறுமிகள் மாயம்

உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்திலுள்ள காப்பகம் ஒன்றில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, 24 சிறுமிகள் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

Updated On : 7 ஆகஸ்ட் 2018, 1:09 am IST
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்திலுள்ள காப்பகம் ஒன்றில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, 24 சிறுமிகள் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 18 சிறுமிகள் மாயமாகி உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது: தியோரியா மாவட்டத்திலுள்ள அரசு உதவி பெறும் காப்பகம் ஒன்றிலிருந்து வேலைப் பளு காரணமாக 10 வயதுச் சிறுமி ஒருவர் தப்பிவந்தார். அவர் அளித்த தகவலின்பேரில் காவல் துறையினர் அந்தக் காப்பகத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்த 24 சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.
காப்பகத்தின் பதிவேட்டை ஆய்வு செய்ததில், அங்கு 42 சிறுமிகள் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, காப்பகத்தின் உரிமையாளர்கள் கிரிஜா திரிபாதி, மோகன் திரிபாதி, கண்காணிப்பாளர் காஞ்சன்லதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மாயமான சிறுமிகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்தக் காப்பகத்தின் உரிமம் கடந்த ஆண்டு ஜூன் மாதமே காலாவதியாகிவிட்டதும், அதற்குப் பிறகு காப்பகத்தை நடத்துவதற்கான அனுமதி அரசின் சார்பில் வழங்கப்படவில்லை என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
அதிரடி நடவடிக்கை: இந்தச் சம்பவம் தொடர்பாக தியோரியா மாவட்ட ஆட்சியர் சுஜித் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உயர்நிலை விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். மேலும், விரைந்து விசாரணை நடத்தி, அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறும் அக்குழுவிற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, பிகாரில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்த போதே, அனைத்து காப்பகங்களையும் நேரில் ஆய்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், ஆட்சியர்கள் அனைவரும் காப்பகங்கள் தொடர்பான அறிக்கையை 12 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரீடா பகுகுணா உத்தரவிட்டுள்ளார். மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் விரைவில் மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள காப்பக உரிமையாளர்கள், அரசு 3 ஆண்டுகளாக நிதி வழங்குவதை நிறுத்தி விட்டதாகவும், காப்பகத்தை மிகுந்த மனஉளைச்சல்களுடன் நடத்தி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பெண்களுக்கெதிராக நடைபெற்று வரும் குற்றங்களை அரசு கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments