FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எஸ்சி, எஸ்டி சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:


எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டப்படும் நபர்களை முதல்கட்ட விசாரணை எதுவுமின்றி உடனடியாக கைது செய்வதற்கு தடை விதித்தும், குற்றம்சாட்டப்பட்டோர் முன்ஜாமீன் பெறுவதற்குரிய அம்சங்களை அறிமுகப்படுத்தியும் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச்சில் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பானது, எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கடுமையான பிரிவுகளை நீர்த்துப்போக செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தை முன்வைத்து, தலித், பழங்குடியின அமைப்புகள் சார்பில் ஏற்கெனவே முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், வரும் 9-ஆம் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை முறியடிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி, எஸ்சி, எஸ்டி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத் திருத்த மசோதா-2018', மக்களவையில் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பு எஸ்சி, எஸ்டி சட்டத்தில் இடம்பெற்றிருந்த கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்ய வழிவகுக்கும் இந்த மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், எஸ்சி, எஸ்டி சட்டத்தின் 18-ஆவது பிரிவில் உச்ச நீதிமன்றம் விதித்த சில கட்டுப்பாடுகளால், அந்த சட்டத்தின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் நிலவி வரும் தாமதத்தை கருத்தில் கொண்டு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதா, எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கடுமையான பிரிவுகளை பாதுகாக்கும்' என்றார்.
இதுதொடர்பாக பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அரசு அண்மை காலங்களில் 6 அவசர சட்டங்களை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் அவசரச் சட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கையை முன்னரே எடுத்திருக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 
தலித், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் பெரும்பாலும் பாஜகவுக்கு தொடர்புடையவர்களாகவே உள்ளனர்' என்றார்.
தெலுங்கு தேசம் எம்.பி. ரவீந்திர பாபு பேசுகையில், எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பான தீர்ப்பை அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கோயலை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமித்த மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்தார்.
இதேபோல், இச்சட்டத்தை அரசமைப்புச் சட்டத்தின் 9-ஆவது பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று டிஆர்எஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வலியுறுத்தின.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments