முசாஃபர்பூர் விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு
பிகார் காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை திங்கள்கிழமை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
பிகார் காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை திங்கள்கிழமை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் உடனடி கேள்வி நேரத்தின்போது, பிகார் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பேசுவதற்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சனுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
அவர்களைத் தொடர்ந்து, மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பேசுவதற்கு முற்பட்டனர். அதற்கு அனுமதி அளிக்காத அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், இந்த சம்பவத்தை ஏற்கெனவே சிபிஐ விசாரித்து வருவதால், அந்த விவகாரம் குறித்து தினமும் விவாதிப்பது முறையல்ல என்று கூறினார்.
இதை ஏற்க மறுத்த ரஞ்ஜீத் ரஞ்சன் அவையின் மையப்பகுதிக்குச் சென்று உரத்த குரலில் அரசுக்கு எதிராகக் கோஷமிட்டார். மேலும், மக்களவைச் செயலர் ஸ்நேகலதா ஸ்ரீவாஸ்தவாவின் மேஜை மீதிருந்த ஒரு புத்தகத்தையும், சில தாள்களையும் அவர் எடுத்து வீசினார்.
பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக, நாராயண் யாதவும், சில காங்கிரஸ் உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.
அப்போது, உறுப்பினர்களின் கவலையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார், இந்த வழக்கை சிபிஐ நேர்மையான முறையில் விசாரிக்கும்; உறுப்பினர்களின் கவலைகள் அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவிக்கப்படும்' என்றார். ஆனால், அமைச்சரின் பதிலால் சமாதானம் அடையாத காங்கிரஸ் உறுப்பினர்களும், ஆர்ஜேடி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனால், அமளியால் அவையில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால், நண்பகல் 12.30 மணி வரை அவைத் தலைவர் ஒத்திவைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.