FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வெடிகுண்டுகளுடன் பயங்கரவாதி கைது: சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் சதி முறியடிப்பு

தில்லியில் சுதந்திர தின விழாவின் போது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.

Updated On : 7 ஆகஸ்ட் 2018, 1:17 am IST
பகிர்:


தில்லியில் சுதந்திர தின விழாவின் போது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.
அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அன்சார் கஷாவத்-உல்-ஹிண்ட் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
அவரிடம் இருந்து 8 கையெறி குண்டுகளும், ரூ.60,000 ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இந்த குண்டுகளை தில்லியில் உள்ள பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்கும் பணி அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவரை போலீஸார் கைது செய்ததன் மூலம் தில்லியில் சுதந்திர தினத்தின்போது நிகழ இருந்த மிகப்பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஜம்மு காவல் துறை ஐ.ஜி. எஸ்.டி.எஸ். ஜம்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜம்மு நகரில் காந்தி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவர் கையில் இருந்த பை குறித்து போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த பதில்கள் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அவரிடம் இருந்த பையை போலீஸார் சோதித்தனர். அதில் 8 கையெறி குண்டுகளும், ரூ.60,000 ரொக்கமும் இருந்தன.
இதையடுத்து அந்த இளைஞரை போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவரது பெயர் இர்ஃபான் ஹுசைன் வானி (25) என்பதும் தெற்கு காஷ்மீரின் அவந்திபோரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அல்-காய்தாவுடன் தொடர்புடைய அன்சார் கஷாவத்-உல்-ஹிண்ட் அமைப்பைச் சேர்ந்த அவரிடம், தில்லிக்கு வெடிகுண்டுகளை கொண்டு சென்று ஒப்படைக்கும் பணி அளிக்கப்பட்டிருந்தது.
அந்த வெடிகுண்டுகள் மூலம் தில்லியில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். ஜம்முவில் போலீஸார் மேற்கொண்ட இந்த கைது நடவடிக்கை மூலம் தில்லியில் சுதந்திர தின விழாவில் நிகழ இருந்த மிகப்பெரிய அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டுவிட்டது. கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி இர்ஃபானிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து மேலும் பல ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன. அத்தகவலின் அடிப்படையில் தில்லியிலும் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. கைப்பற்றப்பட்ட 8 கையெறி குண்டுகளும் காஷ்மீரில் இருந்து ஜம்முவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக காஷ்மீரிலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதையடுத்து, தில்லி, ஜம்மு-காஷ்மீர் மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தினத்தின்போது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments