கேரளத்தில் நிலச்சரிவு: 8 பேர் பலி: மேலும் 12 என்டிஆர்எஃப் குழு அனுப்பிவைப்பு
கேரளத்தில் பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
கேரளத்தில் பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஒரு வார காலமாக கேரளத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது.
வரலாறு காணாத வகையில் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளின் மேற்புறத்தில் மக்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மீட்பு பணிகளும் இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில், பாலக்காடு மாவட்டம், நென்மாரா நகரில் வெள்ளத்தில் சிக்கி வியாழக்கிழமை 8 பேர் உயிரிழந்துவிட்டதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கேரளத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது. மத்திய அரசிடம் இருந்து மேலும் நிவாரண உதவிகளை எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் தொலைபேசியில் வியாழக்கிழமை தெரிவித்தேன். இதுபோன்ற வெள்ளத்தை இதற்கு முன்பு கேரளம் சந்தித்ததில்லை என்றார் பினராயி விஜயன்.
பிரதமர் உத்தரவு: இதையடுத்து, மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து தருமாறு பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.
இதையடுத்து, மத்திய அமைச்சக செயலர் பி.கே.சின்ஹா தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சக செயலர் ராஜீவ் கௌபா, பாதுகாப்புத் துறை அமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் 12 என்டிஆர்எஃப் குழு: கேரளத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட மேலும் 12 தேசியப் பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, ஆலப்புழை, கோழிக்கோடு, வயநாடு, திருச்சூர், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் இந்தக் குழுக்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு என்டிஆர்எஃப் குழுவில் சுமார் 45 வீரர்கள் இருப்பார்கள். இதுதவிர முப்படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரயில் சேவை பாதிப்பு: கேரளத்தில் விமானம் மற்றும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொச்சி மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
முல்லை பெரியார் அணை நிரம்பி வருவதை மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஆய்வு செய்து வருகிறார்.
முப்படை வீரர்களும், தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் உதவி கோரும் மக்கள்: குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அடுக்குமாடி குடியிருப்புகளிலும், விடுதிகளிலும், தேவாலயங்களிலும் தஞ்சம் அடைந்திருப்பவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி உதவி கோரி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.