அரசின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் "சதிகாரர்கள்' அல்ல
மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகளின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகவும், மக்களின் உரிமைகளைக் காக்கவும் போராடும் ஆர்வலர்கள், "சதிகாரர்கள்' அல்ல என்று பீமா-கோரேகான் வன்முறை வழக்கில்
ஹைதராபாத்: மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகளின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகவும், மக்களின் உரிமைகளைக் காக்கவும் போராடும் ஆர்வலர்கள்,"சதிகாரர்கள்' அல்ல என்று பீமா-கோரேகான் வன்முறை வழக்கில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள இடதுசாரி ஆர்வலர் வரவர ராவ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் பகுதியில் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நிகழ்ந்த "எல்கர் பரிஷத்' வன்முறையில் தொடர்பு இருப்பதாகக் கூறி, இடதுசாரி ஆர்வலர்கள் ஐவரை மகாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்த விவகாரத்தில், அவர்களை செப்டம்பர் 6-ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அனைவரும் அவரவர் வீடுகளுக்கு, பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரத்திலிருந்து ஹைதராபாதுக்கு, வியாழக்கிழமை அழைத்து வரப்பட்ட இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பீமா-கோரேகான் வன்முறை வழக்கு முற்றிலும் பொய்யானது. மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகளின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகவும், மக்களின் உரிமைகளைக் காக்கவும் போராடும் சமூக ஆர்வலர்களைச் "சதிகாரர்கள்' என்று அரசு கூறுவதே, மிகப் பெரிய சதியாகும். இந்த வன்முறை தொடர்பாக, மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகளின் மீது தான் வழக்கு தொடரப்பட்டிருக்க வேண்டும்.
எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறியும், உச்ச நீதிமன்றம் எங்களை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறினார்.
பலத்த பாதுகாப்பு: கைது செய்யப்பட்டுள்ள வரவர ராவ் உள்ளிட்ட 5 பேரும், பலத்த பாதுகாப்புடன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வரவர ராவைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், ராவ் தரப்பு வழக்குரைஞர்களுக்கும், ராவை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் கூறியதாவது:
வரவர ராவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால், அதை விட்டு வெளியே வருவதற்கும், பொது வெளியில் நடமாடவும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவியும் குழந்தைகளும் மட்டுமே, அவர் தங்கியுள்ள வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அவர் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.