எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு: இறுதித் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
புது தில்லி: எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வியாழக்கிழமை இத்தீர்ப்பினை வழங்கியது.
அரசு உயர் பதவிகளில் இடஒதுக்கீடு வழங்கும்போது முன்னேறிய வகுப்பினர் பலன் பெற முடியாது என்ற வரம்பின் கீழ், எஸ்.சி/எஸ்.டி மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மறுக்க முடியாது என்றும், அவர்களுக்கு சலுகைகள் அளிப்பதற்கு முன், அவர்களின் பொருளாதார நிலைகளை அறிந்து, அதற்கேற்ப அந்தந்த மாநிலங்கள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த 2006-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்தத் தீர்ப்பை 7-நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு பிரிவினரும், பல்வேறு மாநிலங்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை மறுஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டுமா, வேண்டாமா என்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் குரியன் ஜோசஃப், ஆர்.எஃப்.நாரிமன், சஞ்சய் கிஷன் கெளல் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகிய ஐவர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது.
பொருளாதார ரீதியாக எஸ்.சி/எஸ்.டி மக்கள் முன்னேறியிருந்தாலும் கூட, சமூகத்தில் அவர்களது பின்தங்கிய நிலையும், ஒடுக்கப்பட்ட ஜாதியினர் என்ற அடையாளமும் அவர்களை விட்டு விலகவில்லை என்றும், எனவே அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டியது அவசியம் என்றும் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ராவ் வாதிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றபோது, மனுதாரர்கள் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் அரசுப் பதவிகளில் பணியமர்ந்ததுமே, இடஒதுக்கீட்டுக்கான நோக்கம் நிறைவேறிவிடுகிறது. எனவே, உயர் பதவிகளில் மேலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், வேண்டுமானால் மூன்றாம் நிலை, நான்காம் நிலைப் பணிகளில் மட்டும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்றும் வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களும் வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில்,"எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கும், மற்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வேறுபாடு உள்ளது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் அரசியலமைப்புச் சட்டத்திலேயே பிற்படுத்தப்பட்டவர்களாகப் குறிப்பிடப்பட்டுள்ளனர். உயர் பதவிகளில், எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் மற்ற பிரிவினரை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தால், அதன் அடிப்படையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஆலோசிக்கலாம்' என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் இறுதித் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.