FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காலா: கர்நாடகத்தில் திரையிடுவது நிறுத்திவைப்பு

கன்னட அமைப்பினரின் போராட்டத்தைத் தொடர்ந்து கர்நாடகத்தில் காலா' திரைப்படம் திரையிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

Updated On : 8 ஜூன் 2018, 12:47 am IST
பெங்களூரில் காலா திரைப்படம் வெளியாக இருந்த திரையரங்க வளாகம் ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட கர்நாடகப் போலீஸார்.
பகிர்:

கன்னட அமைப்பினரின் போராட்டத்தைத் தொடர்ந்து கர்நாடகத்தில் காலா' திரைப்படம் திரையிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் நடித்துள்ள காலா' திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கன்னட அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, 'காலா' திரைப்படத்தை கர்நாடகத்தில் வெளியிட தடை விதிப்பதாக மே 29-ஆம் தேதி அறிவித்திருந்தது. 
காலா' திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க கர்நாடக அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றும் என்றாலும், கன்னடர்களின் விருப்பத்துக்கு எதிராக காலா' திரைப்படத்தை இந்த சந்தர்ப்பத்தில் வெளியிடுவது சரியானதல்ல என்று கர்நாடக முதல்வர் குமாரசாமியும் கருத்துத் தெரிவித்திருந்தார். காலா' திரைப்படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நான் எந்த தவறும் செய்யவில்லை. காலா' திரைப்படத்தை வெளியிட கன்னட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்திருந்தார். 
இந் நிலையில், காலா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உலகமெங்கும் வியாழக்கிழமை திரையிடப்பட்டது. பெங்களூரு, மைசூரு, கோலார், பெல்லாரி, ராய்ச்சூரு, தும்கூரு, மங்களூரு, மண்டியா, ஹுப்பள்ளி, தார்வாட் உள்பட கர்நாடகத்தின் பல பகுதிகளில் காலா' திரைப்படம் வியாழக்கிழமை திரையிடப்பட்டது. பெங்களூரில் ஓரியன் மால், மந்திரிமால், கருடாமால், ஈட்டா மால், ஊர்வசி, ஸ்ரீபாலாஜி, லிடோ திரையரங்குகளில் திரையிடப்பட்டது. திரைப்படத்தை காண ரசிகர்கள் காலை 5 மணிக்கே திரையரங்குகளில் குவிந்துவிட்டனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ரசிகர்களின் பாதுகாப்புக்காக திரையரங்குகள் முன்பாக போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். இதையும் மீறி காலை 5 மணிக்கே காலா' திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன் திரண்ட பிரவீண்ஷெட்டி தலைமையிலான கர்நாடக ரக்ஷன வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்பினர் படத்தை திரையிடுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். 
மேலும், திரையரங்குகளில் குவிந்திருந்த ரசிகர்களைச் சந்தித்து காவிரி தண்ணீர் இல்லாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கும்படி கேட்டுக்கொண்டனர். காவிரி ஆற்றுநீர் உரிமைக்காக போராடிவரும் கன்னட அமைப்புகளின் நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். திரைப்படத்தைக் காட்டிலும், காவிரி தண்ணீர் மிகவும் முக்கியமானது என்றும் எடுத்துக் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட சலுவளிக்கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ், பிரவீண் ஷெட்டி உள்ளிட்ட ஏராளமானோரை போலீஸார் கைதுசெய்து, பின்னர் விடுவித்தனர்.
கன்னட அமைப்புகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, பெல்லாரி, ராய்ச்சூரு தவிர பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் இதர பகுதிகளில் காலா' படம் திரையிடப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. நுழைவுச்சீட்டு வாங்கி வைத்திருந்த ரசிகர்களுக்கு அதற்குரிய கட்டணத்தை திரையரங்குகள் வழங்கிவிட்டன. போராட்டம் ஓய்ந்த நிலையில், நண்பகல் 2 மணிக்கு மேல் ஒருசில மால்களில் மட்டும் 'காலா' திரைப்படம் திரையிடப்பட்டது. அங்கு மக்கள் மிகுந்த அச்சத்துடன் திரைப்படத்தை பார்த்தனர். காலா' படம் வெளியிடப்படாததால், நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். கன்னட அமைப்பினரின் போராட்டம் தொடராவிட்டால் பெங்களூரில் உள்ள திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை காலா' படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments