FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக செஷல்ஸ் நீடிக்கும்: அதிபர் டேனி ஃபாரே

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக செஷல்ஸ் நீடிக்கும்' என்று அந்நாட்டின் அதிபர் டேனி ஃபாரே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

Updated On : 27 ஜூன் 2018, 1:26 am IST
செஷல்ஸ் நாட்டுக்கு டார்னியர்' விமானத்தை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டின் அதிபர் டேனி ஃபாரே. (இடம்: தில்லி பாலம் விமானப் படை தளம்).
பகிர்:

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக செஷல்ஸ் நீடிக்கும்' என்று அந்நாட்டின் அதிபர் டேனி ஃபாரே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 
6 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா வந்த அவர், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, செஷல்ஸின் அஸ்ஸம்ஷன் தீவில் இந்திய கடற்படை தளம் அமைக்கும் திட்டத்தில், பரஸ்பர நலன்களின் அடிப்படையில் ஒருங்கிணைந்து பணியாற்றுவது என இருவரும் உறுதி மேற்கொண்டனர்.
மேலும், கடந்த 2015-இல் தாம் செஷல்ஸ் சென்றபோது உறுதியளித்தபடி, அந்நாட்டின் கடல்சார் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்தியா சார்பில் டார்னியர்' ரக விமானம் வழங்கப்பட உள்ளதாக மோடி தெரிவித்தார்.
இந்நிலையில், தில்லியின் பாலம் விமானப் படை தளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், டார்னியர்' விமானத்தை செஷல்ஸ் அதிபர் டேனி ஃபாரேவிடம் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஒப்படைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய டேனி ஃபாரே, இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாகவும் கூட்டாளியாகவும் செஷல்ஸ் தொடர்ந்து இருக்கும்' என்றார். அவர் மேலும் கூறியதாவது:
இந்தியா - செஷல்ஸ் இடையிலான உறவுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது இந்தியா வழங்கியுள்ள டார்னியர்' விமானம், செஷல்ஸ் மக்கள் மீதான இந்தியாவின் அன்பு, அக்கறைக்கு சான்றாக உள்ளது. இது, நமது பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு மைல்கல் ஆகும். செஷல்ஸ் மக்களின் சார்பில் இந்தியாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விமானம், எங்களது கடல் எல்லை பாதுகாப்புக்கு மேலும் வலுசேர்க்கும் என்றார் டேனி ஃபாரே.
நிகழ்ச்சியில் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், இந்தியாவும் செஷல்ஸும் தனித்துவமான உறவை கொண்டுள்ளன. கடல் பகுதியில் பாதுகாப்பு, அமைதியை பராமரித்தால்தான் நாடுகளின் வளர்ச்சி நிலையானதாக இருக்கும். கடல்சார் பாதுகாப்பில் செஷல்ஸுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்' என்றார்.
கடந்த 2013-இல் செஷல்ஸ் தீவுக்கு இந்தியா ஒரு டார்னியர் விமானத்தை வழங்கியது. கடந்த 2016-இல் கடல்சார் கண்காணிப்பு பணிக்காக அதிவேக படகு ஒன்றை அந்நாட்டுக்கு இந்தியா பரிசாக வழங்கியிருந்தது.
தற்போது வழங்கப்பட்டுள்ள 2-ஆவது டார்னியர்' விமானம், பெங்களூரு, திருவனந்தபுரம் வழியாக மாலத்தீவு சென்று அங்கிருந்து 29-ஆம் தேதிக்குள் செஷல்ஸ் சென்றடையவிருக்கிறது. 29-ஆம் தேதி செஷல்ஸில் தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளது. 
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், செஷல்ஸின் அஸ்ஸம்ஷன் தீவில் கடற்படை தளத்தை அமைக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக கடந்த 2015-இல் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், உள்நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த ஒப்பந்தத்தை கைவிட செஷல்ஸ் முடிவு செய்திருப்பதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியானது. 
இந்நிலையில், அந்த திட்டத்தில் இருதரப்பு நலன்கள், பங்களிப்பின் அடிப்படையில் ஒருங்கிணைந்து பணியாற்ற பிரதமர் மோடியும், அதிபர் டேனி ஃபாரேவும் உறுதிபூண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments