ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி மனு மீது இன்று விசாரணை
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை புதன்கிழமைக்கு (ஜூன் 27) உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை புதன்கிழமைக்கு (ஜூன் 27) உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமலாக்கத் துறை கூடுதல் இயக்குநர் ராஜேஷ்வர் சிங் என்பவர் நியமிக்கப்பட்டார். இவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராஜ்னீஷ் கபூர் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ராஜேஷ்வர் சிங் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்திருப்பதாகவும், அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, சுப்பிரமணியன் சுவாமி சார்பில், இந்த வழக்கில், தன்னையும் பிரதிவாதியாக சேர்க்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 20ஆம் தேதி, இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சுப்பிரமணியன் சுவாமியிடம் வேறோரு அமர்வு முன்பு அவரது மனுவை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அப்போது அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஹிந்து மல்கோத்ரா, அதில் இருந்து விலகிக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் குமார் மிஸ்ரா, எஸ்.கே. கௌல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு சுப்பிரமணியன் சுவாமி புதிய மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இதை பரிசீலித்த நீதிபதிகள், அந்த மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்த ஒப்புக் கொண்டனர். அதேபோல், ராஜ்னீஷ் கபூருக்கு எதிராக கிரிமினல் அவதூறு நடவடிக்கை எடுக்கக்கோரி, அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் தாக்கல் செய்த மனு மீதும் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே. கௌல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு 2 மனுக்களும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது ராஜ்னீஷ் கபூர் தரப்பில், அவரோ அல்லது அவரின் வழக்குரைஞரோ நேரில் ஆஜராகவில்லை. இதைக் கண்ட நீதிபதிகள், சுப்பிரமணியன் சுவாமியிடம், அவரது மனுவின் நகலை ராஜ்னீஷ் கபூரிடம் அளித்தீர்களா? இல்லையா? என கேட்டனர். இதற்கு மனுவின் நகலை கபூருக்கு அளித்து விட்டதாக சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீது புதன்கிழமை விசாரணை நடத்தப்படும்; எனவே கபூரிடம் மனுவின் நகலை அளிப்பதோடு, அவரை புதன்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி சுப்பிரமணியன் சுவாமியை நீதிபதிகள் அறிவுறுத்தினர். அத்துடன் ராஜேஷ்வர் சிங்கின் கிரிமினல் அவதூறு மனு மீதும் புதன்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.