தேர்தல் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு: முகநூல் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, முகநூல் பக்கங்களில் இடம்பெற்றுள்ள தேர்தல் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று முகநூல் நிறுவனத்தை தேர்தல்
தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, முகநூல் பக்கங்களில் இடம்பெற்றுள்ள தேர்தல் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று முகநூல் நிறுவனத்தை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் 126-ஆவது பிரிவின்படி, ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாகவே, தொலைக்காட்சி போன்ற மின்னணு ஊடகங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் தேர்தல் விளம்பரங்களத் தடை செய்வது குறித்து விவாதிப்பதற்காக, தேர்தல் ஆணயம் கடந்த 4-ஆம் தேதி சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், செய்தி ஒலிபரப்பு சங்கம், பிரஸ் கவுன்சில் இந்தியா, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முகநூல் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதியும் கலந்து கொண்டார்.
அவரிடம், தேர்தல் நேரத்தில், முகநூல் பக்கத்தில் விதிகளை மீறி பதிவிடும் கருத்துகளுக்கும், தேர்தல் விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு முகநூல் நிறுவனத்தின் பிரதிநிதி அளித்த பதில்: முகநூல் பக்கத்தில் தேர்தல் விதிகளை மீறும் வகையில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், முதலில் பயன்பாட்டாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். பிறகு அந்த கருத்துகள் முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு விடும். தேர்தல் விதிகளை மீறி கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
எனினும், தேர்தல் விளம்பரங்களைத் தடை செய்வது குறித்து முகநூல் நிறுவனத்தின் பிரதிநிதி எந்தப் பதிலும் அளிக்கவில்லை. எனினும், தேர்தல் விளம்பரங்களைத் தடை செய்வது குறித்து அந்த நிறுவனம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.