FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஊழல் குற்றச்சாட்டுகள்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் பதில் மனு தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு வழக்கை எதிர்கொண்டு வரும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அதுதொடர்பான பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து அதை அவர்

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

ஊழல் குற்றச்சாட்டு வழக்கை எதிர்கொண்டு வரும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அதுதொடர்பான பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து அதை அவர் தாக்கல் செய்தார்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை அவருக்கு பிறப்பித்தது. அதாவது, அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலையும், விளக்கத்தையும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக அளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது. பதில் மனு தாக்கல் செய்யப்படாததைக் காரணமாக வைத்து இதுதொடர்பான வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க முடியாது என்றும் கூறியிருந்தது. இதையடுத்தே அதனை அலோக் வர்மா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
நாட்டின் பிரதான விசாரணை அமைப்பாகத் திகழும் சிபிஐ - யில் அங்கம் வகிக்கும் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே எழுந்த மோதலானது, இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொள்ளும் அளவுக்கு சென்றது
இதையடுத்து, இதுதொடர்பாக தீர்வு காணும் விதமாக அவர்கள் இருவரது அதிகாரங்கள் தற்காலிகமாக பறிக்கப்பட்டன.
அவர்கள் மீதான புகார்களையும் விசாரிப்பதற்காக இடைக்கால இயக்குநர் பதவி நாகேஸ்வர ராவுக்கு அளிக்கப்பட்டது. அந்த விசாரணை நிறைவடையும் வரை இருவருக்கும் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனிடையே, அலோக் வர்மாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வின் முன்பு கடந்த வாரம் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு அலோக் வர்மாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கு நடுவே இந்த விவகாரத்தில் முதல்கட்ட விசாரணை அறிக்கையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனை தலைமை நீதிபதி அமர்வு திங்கள்கிழமை பரிசீலித்தது. அப்போது, ஆஜரான அலோக் வர்மாவின் வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன், இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் உடனடியாக அதனை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து திங்கள்கிழமை பதில் மனுவை அலோக் வர்மா தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்றத்தை நாடிய சிபிஐ அதிகாரி: இதனிடையே, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கை விசாரித்து வந்த அதிகாரி மணீஷ் குமார் சின்ஹா திடீரென நாகபுரிக்கு (மகாராஷ்டிரம்) பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments