ராஜஸ்தான்: சச்சின் பைலட்டை தோற்கடிக்க பாஜக வியூகம்
ராஜஸ்தானில் திடீர் திருப்பமாக மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு எதிராக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அமைச்சர் யூனிஸ் கானை பாஜக களமிறக்கியுள்ளது. சச்சின் பைலட் போட்டியிடும்
ராஜஸ்தானில் திடீர் திருப்பமாக மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு எதிராக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அமைச்சர் யூனிஸ் கானை பாஜக களமிறக்கியுள்ளது. சச்சின் பைலட் போட்டியிடும் டோங் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் மக்கள் உள்ளனர். எனவே, அவருக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் யூனிஸ் கானை அத்தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான திங்கள்கிழமை பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது. முன்னதாக, இந்தத் தொகுதி பாஜக எம்எல்ஏவான அஜீத் சிங் மேத்தாவை வேட்பாளராக பாஜக அறிவித்திருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். சச்சின் பைலட்டை தோற்கடிக்கும் பாஜகவின் முக்கிய உத்தியாக இது கருதப்படுகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் சச்சின் பைலட் முதல்வராக வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிகிறது. அவருக்கு எதிராக முஸ்லிம் அமைச்சரை பாஜக களமிறக்கியுள்ளதால், அத்தொகுதியில் தேர்தல் களம் மேலும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
அமைச்சர் யூனிஸ் கான், இப்போது தீத்வானா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். பாஜகவில் கடைசி நேரம் வரை அவருக்கு தொகுதி ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை 6 வேட்பாளர் அடங்கிய 5-ஆவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் யூனிஸ் கான், டோங் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் யூனிஸ் கான் மட்டுமே முஸ்லிம் வேட்பாளர் ஆவார். காங்கிரஸ் சார்பில் 15 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 15 வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். பாஜக சார்பில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டு, அவர்களில் இருவர் வெற்றி பெற்றனர்.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.