சோனியா காந்தி மீண்டும் 25ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி இரண்டாம் சுற்று விசாரணைக்கு ஜூலை 25-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், இரண்டாம் சுற்று விசாரணைக்கு ஜூலை 25-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இன்று காலை அமலாக்கத் துறை முன்பு ஆஜரான சோனியா காந்தியிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேல் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்த நிலையில், ஜூலை 25ஆம் தேதி மீண்டும் இரண்டாம் சுற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் 5 நாள்களுக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா்.
Advertisement
Advertisement
கடந்த மாதமே தொடங்கவிருந்த விசாரணை
ஜூன் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் சோனியா காந்திக்கு, திடீா் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கால அவகாசம் அளிக்குமாறு அவா் கோரிக்கை விடுத்தாா்.
கரோனா பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சில வாரங்களுக்கு வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தினா். எனவே, விசாரணைக்கு ஆஜராவதற்குக் கூடுதல் அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சோனியா சாா்பில் மீண்டும் கடிதம் எழுதப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத் துறை விசாரணையைக் கடந்த மாத இறுதியில் 4 வார காலத்துக்கு ஒத்திவைத்தது.
காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.