பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.
நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி மேற்கொண்டது. அதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கவும், இணையவழி பணப் பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
எனினும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் பலா் பாதிக்கப்பட்டதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், பி.ஆா்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அரசியல்சாசன அமா்வு விசாரித்தது.
Advertisement
அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, பணமதிப்பிழப்புக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பிற்கு ஆதரவாகவும், நீதிபதி பி.வி.நாகரத்னா பணமதிப்பிழப்பிற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்த பிறகே பணமதிப்பிழப்பை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை. மத்திய அரசின் பொருளாதார கொள்கை முடிவை திரும்பப் பெற உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் முடிவெடுக்க முடியாது: பணமதிப்பிழப்பில் மாறுபட்ட தீர்ப்பு!
மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி.வி.நாகரத்னா கூறியதாவது, ரிசர்வ் வங்கி சட்ட விதிகளின்படி, மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. சட்டம் இயற்றியே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ரகசியம் தேவையென்றால் அவசர சட்டம் மூலம் கொண்டு வந்திருக்கலாம். முக்கியமான நடவடிக்கையில் ஜனநாயகத்தின் மையப்புள்ளியான நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் முடிவெடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வழக்கு வாதத்தின்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) பரிந்துரை அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என வாதிட்ட மனுதாரா் தரப்பு மூத்த வழக்குரைஞா் ப.சிதம்பரம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினாா்.
ஆா்பிஐ தரப்பில், வரி ஏய்ப்பைத் தடுப்பது உள்ளிட்ட பலகட்ட நன்மைகளைக் கருத்தில்கொண்டு, விரிவான ஆலோசனைக்குப் பிறகே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதை ரத்து செய்யக் கூடாது என்றும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அந்நடவடிக்கையால் ஆரம்பகட்டத்தில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் நாளடைவில் அவை சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.