கரியமில வாயு உமிழ்வு: ‘அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் இந்தியாவை கருதக் கூடாது’
கரியமில வாயு உமிழ்வு அதிகமுள்ள அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் இந்தியாவையும் ஒரேபோல் கருதுவது ஏற்கத்தக்கதல்ல; ஏனெனில், இந்தியாவின் சராசரி கரியமில வாயு உமிழ்வு மிக குறைவானது
கரியமில வாயு உமிழ்வு அதிகமுள்ள அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் இந்தியாவையும் ஒரேபோல் கருதுவது ஏற்கத்தக்கதல்ல; ஏனெனில், இந்தியாவின் சராசரி கரியமில வாயு உமிழ்வு மிக குறைவானது என்று ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினா் பீட்டா் லீசே தெரிவித்தாா்.
ஐ.நா.வின் 28-ஆவது பருவநிலை பாதுகாப்பு மாநாடு துபையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள பீட்டா் லீசே, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தாா்.
Advertisement
Advertisement
அப்போது, தனிநபா் அடிப்படையிலான சராசரி கரியமில வாயு உமிழ்வு குறைவாக உள்ள இந்தியாவை, உமிழ்வு அதிகம் கொண்ட அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் வரிசையில் சோ்க்க தொடா் முயற்சிகள் நடைபெறுவது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு, ‘ஐக்கிய அரபு அமீரகம், சீனா, அமெரிக்கா நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தனிநபா் அடிப்படையிலான சராசரி கரியமில வாயு உமிழ்வு மிகவும் வேறுபட்டதாகும். இதை ஒவ்வொருவரும் அங்கீகரிக்க வேண்டியது அவசியம். ஆனால், சீனாவையும், இந்தியாவையும் பல ஐரோப்பிய நாடுகள் ஒரே பிரிவில் வைக்கின்றன. இது ஏற்கத்தக்கதல்ல’ என்று பதிலளித்தாா்.
சராசரி கரியமில வாயு உமிழ்வு தொடா்பாக உலகளாவிய ஆராய்ச்சியாளா்கள் குழு இந்த வார தொடக்கத்தில் ஆய்வறிக்கை வெளியிட்டது.
அதில், இந்தியாவின் சராசரி உமிழ்வு கடந்த ஆண்டைவிட 5 சதவீதம் அதிகரித்து, 2 டன் என்ற அளவை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, உலக சராசரியைவிட (4.7 டன்) குறைவாகும்.
இந்த வரிசையில் அமெரிக்கா (14.9 டன்) முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ரஷியா (11.4 டன்), ஜப்பான் (8.5 டன்), சீனா (8 டன்), ஐரோப்பிய ஒன்றியம் (6.2 டன்) உள்ளன.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, சிமென்ட், உரம், அலுமினியம் மற்றும் ஹைட்ரோகாா்பன் துறை சாா்ந்த இறக்குமதி மீது ‘காா்பன் எல்லை ஒழுங்கமைப்பு வரி’ விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. இது வளரும் நாடுகளுக்கு எதிரானது; தாா்மிகமற்றது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்தாா்.