தவெக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் பாவமன்னிப்பு கொடுப்பது ஏன்? - ஆர்.பி. உதயகுமார் கேள்வி
தூய்மை நகரப் பட்டியலில் இடம் பிடிக்காத தமிழ்நாடு, விலைவாசி உயர்வில் நாட்டிலேயே முதல் இடம் பிடித்துள்ளது குறித்து...
தூய்மை இந்தியா பட்டியலில் தமிழகம் இடம் பிடிக்கவில்லை. ஆனால் விலைவாசி உயர்வு, பண வீக்கத்தில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது, ரிசர்வ் வங்கி விதித்த வரம்பை விட தமிழகம் பணவீக்கம் அதிகரித்து உள்ளது என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக அம்மா பேரவை மாநிலச் செயலருமான ஆா்.பி. உதயகுமாா் குற்றச்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் சார்பில் 2016ஆம் ஆண்டிலிருந்து,தூய்மை நகரங்கள் பட்டியலில் ஆண்டுதோறும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை நகரங்களின் பட்டியலை அடையாளம் காணப்பட்டு, விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை எல்லாம் வழங்கப்பட்டுவருவது. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
Advertisement
Advertisement
மாற்றம் ஏற்பட தவெகஅரசு முயற்சி எடுக்குமா?
இதில் இந்தப் பட்டியலில் முதல் மூன்று முதன்மை இடங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை என்பதுதான் ஒவ்வொரு தமிழருக்கும் வருத்தமளிப்பதாக உள்ளது. மாற்றம் ஏற்பட தவெக அரசு முயற்சி எடுக்குமா?
முதல் இடத்தில் மும்பை நவி
2025-2026 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தூய்மை நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தை மும்பையின் நவியும், இரண்டாவது இடத்தை குஜராத்தின் சூரத் மற்றும் மூன்றாவது இடத்தை ஆந்திராவின் விஜயவாடா உள்ளிட்ட நகரங்கள் பிடித்துள்ளன.
அதேபோல 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களிலே ஆந்திராவின் விசாகப்பட்டினமும், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர், உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்நவ் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
அதேபோல 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள்தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் முதலிடம் பிடத்துள்ளது. அடுத்த இடங்களை சண்டிகர், குண்டூர் பிடித்துள்ளன.
அதோடு ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள தூய்மை நகரங்களின் பட்டியலில் மத்தியப் பிரதேசத்தின் ரேவா முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த இடங்களை சத்தீஸ்கரின் பிளாஸ்பூர், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகம் இடம் பெறவில்லை.
பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழும் நகரங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட நகரங்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதில், நாம் கவலைப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், தவெக அரசில் தூய்மை நகரப் பட்டியலில் இடம் பிடிக்காத தமிழ்நாடு, விலைவாசி உயர்வில் நாட்டிலேயே தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது.
பணவீக்க விகிதம் உயர்வு
கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.81% ஆக இருந்த தமிழ்நாட்டின் பணவீக்க விகிதம், அக்டோபரில் 7.29% ஆக அதிகரித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் உச்ச வரம்பைவிட அதிகம்.
உணவுப் பொருளின் பணவீக்கம் செப்டம்பர் மாதத்திலே 7.74% இருந்தது. இப்போது அக்டோபர் மாதத்தில் 8.94% ஆக உயர்ந்திருக்கிறது. அதிக விலைவாசி உயர்வில் இடம்பிடித்திருக்கிற உணவுப் பொருட்கள், இதை மொத்தமாக பட்டியலிட்டால் ஒரு நாள் போதாது. அதில் வெங்காயம் மட்டும் 116.22%, விலை உயர்வு. பூண்டு 60.74%, இஞ்சி 48.32%, எலுமிச்சை 47.3% விலை உயர்ந்துள்ளது.
கிராமப்புற பணவீக்கம் உயர்வு
கிராமப்புற பணவீக்கம் 6.08% இல் இருந்து 6.63% ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் 9% இருக்க வேண்டும். நகர்ப்புற பணவீக்கம் 4.8% இருந்தது, இப்ப 5.41% அதிகரித்திருக்கிறது. பொதுவாக 8.68% ஆக இருக்கும். ரிசர்வ் வங்கியின் உச்சகட்ட வரம்பு 6%. அந்த எல்லையை கடந்திருப்பது பொருளாதாரத்தில் இதுதான் முதல் முறை என்றும், பொருளாதார வல்லுநர்கள் எல்லாம் கவலைப்படக்கூடிய சூழ்நிலைதான் தவெக அரசின் நிதிநிலை நிலவரம் உள்ளது.
அக்டோபரில் பணவீக்கம் 6.25% தான் இருந்தது. தற்போது தமிழ்நாடு 7.29% அடைந்து முதலிடத்தில் உள்ளது. தெலங்கானா 7.26 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், ஆந்திரம் 7.25 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
தூய்மை நகரத்தில் இடம் பிடிக்க முடியாத தமிழ்நாடு விலைவாசி உயர்வில் முதலிடத்தில் உள்ளது. இதுதான் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு கிடைத்திருக்கிற பரிசாக உள்ளது.
எல்லை மீறும் எம்எல்ஏக்கள்
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை குறித்து கேட்கவே வேண்டாம். முதல்வர் நாள்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தினாலும், அதற்கு தீர்வு காண முடியவில்லை. இதில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் கடத்தல், பெண் பாலியல், அதில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை கடந்து, தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களே தங்கள் எல்லை மீறி போய்கிறார்கள்.
பாவமன்னிப்பு கொடுப்பது ஏன்?
அவர்களை கூப்பிட்டு முதல்வர் விஜய் சந்திக்கிறார். ஆனால் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. அவர்களுக்கு பாவமன்னிப்பு கொடுக்கிற சூழ்நிலையில்தான் முதல்வர் உள்ளார். காரணம், அவருக்கு பெரும்பான்மை இல்லை. எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்கள் தமக்கு எதிராக திரும்பிவிடுவார்கள் என நினைக்கிறார். அப்படித்தான் அதை பார்க்க முடியும்.
தமிழ்நாடே எதிர்க்கிறது
எம்எல்ஏ-க்களை கூப்பிட்டு முதல்வர் என்ன பேசினார் என நமக்கு தெரியாது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் இழி செயலை மக்கள் முகம் சுளிக்கின்ற வகையில்தான் ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்க்கிறது. ஆனால், ஒரு நாட்டின் முதல்வரே கண்டும் காணாமல் இருக்கிறார். இதற்கு மக்கள்தான் தீர்ப்பு சொல்லணும். வேறு யாரும் தீர்ப்பு சொல்ல முடியாது. முதல்வர் இதை அமைதியா கடந்து செல்கிறார்.
தமிழ்நாட்டுக்கான தலை குனிவு
தவெக எம்எல்ஏ மாவட்ட ஆட்சித் தலைவருக்கே காதல் கடிதம் எழுதுற அளவுக்கு இந்த நாடு எங்க போயிட்டு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு இது ஒரு தலை குனிவு.
விஜய்க்கே வெளிச்சம்
முதல்வர், இதை நீங்க எப்படி எடுத்துக்கிறீங்கன்னு தெரியாது. சட்டம்-ஒழுங்கை பொருத்தவரை நீங்கள் திரைப்படத்தில் வேண்டுமானால், அது உங்களுக்கு கை வந்த கலையாக இருக்கலாம். அப்படி நடித்துதான் நீங்க மக்களிடம் இன்னைக்கு நம்பிக்கை பெற்றிருக்கிறீங்க. ஆனால், நிஜத்தில் ரொம்ப கடினமாக அதற்கு உழைக்கணும். அதிகமான கவனம், அதற்காக அக்கறை செலுத்தணும். நீங்கள் செலுத்துறீங்களா இல்லையான்னு தெரியவில்லை. ஆனால் சட்டம்-ஒழுங்கு சிதைஞ்சு போச்சு. இதை எடப்பாடியார் மட்டும் சொல்ல வில்லை. எல்லாரும் சொல்கிறார்கள், நாடே சொல்லுது. முதல்வர் விஜய்க்கே வெளிச்சம் என்று கூறினார்.