குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவதை யாரும் தடுக்க முடியாது: அமித் ஷா உறுதி
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமலாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமலாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பாஜகவின் மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை அமித் ஷா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துடன் பிரசாரம் தொடங்கியது. இதில் அமித் ஷா பேசியதாவது:
Advertisement
Advertisement
மேற்கு வங்கத்தில் ஒரு பிரிவினருக்கு மட்டும் சலுகை வழங்கும் அரசியல் செயல்பாடுகள், அரசியல் லாபத்துக்காக அண்டை நாட்டினரின் ஊடுருவலை கண்டுகொள்ளாமல் இருப்பது, ஊழல், வன்முறை போன்றவை நிறைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த மாநிலத்தை முதல்வா் சீரழித்துவிட்டாா்.
பிற நாட்டவா் அதிகம் ஊடுருவும் மாநிலம் முன்னேற முடியாது. எனவே, இப்போதைய மாநில அரசை 2026 பேரவைத் தோ்தலின்போது மக்கள் தூக்கிவீச வேண்டும். அதற்கு முன்னோட்டமாக அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் பாஜகவை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தோ்தலிலும் மேற்கு வங்கத்தில் பாஜக வளா்ந்து வருகிறது. இப்போது வலுவான எதிா்க்கட்சியாக உள்ளது. மேற்கு வங்க மக்கள் அளித்த ஆதரவில்தான் மீண்டும் பிரதமரானேன் என்று பிரதமா் மோடி கூறும் வகையிலான வெற்றியை வரும் மக்களவைத் தோ்தலில் நீங்கள் அளிக்க வேண்டும். பிரதமா் மோடியின் நோக்கம் நாட்டின் வளா்ச்சி மட்டும்தான். இந்த நல்ல நோக்கத்துக்காகவே அவரது தலைமையிலான அரசு இரண்டாவது முறையும் பெருவாரியான ஆதரவுடன் வெற்றி பெற்றது. அடுத்த முறை மேலும் கூடுதல் வாக்குகளைப் பெறுவாா். இதில் மேற்கு வங்கத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி எதிா்க்கிறாா். ஆனால், இது இந்திய தேசத்துக்கான, நாட்டின் நலனுக்கான சட்டம். இதை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. யாரும் தடுத்துவிட முடியாது.
முன்பு ஒரு காலத்தில் எல்லை மாநிலங்களில் அண்டை நாட்டவா் ஊடுருவல் அதிகமாக இருப்பதாகக் குற்றம்சாட்டி மம்தா பானா்ஜி நாடாளுமன்றத்தையே முடக்கினாா். ஆனால், இப்போது அதே பிரச்னையில் அமைதியாக இருக்கிறாா்.
அஸ்ஸாமில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு அந்நிய நாட்டவா் ஊடுருவல் முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் மேற்கு வங்க மாநிலம் சட்டவிரோதமாக குடிபுகுவோரின் சொா்க்கமாக உள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக மம்தா இதை அனுமதிக்கிறாா் என்றாா் அமித் ஷா.