காங். தேர்தல் அறிக்கை இஸ்லாமிய சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது -பிரதமா் விமர்சனம்
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது என்று தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தோ்தலையொட்டி காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை நேற்று(ஏப். 5) வெளியிட்டது.
Advertisement
Advertisement
அதில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, தமிழக மக்களின் கோரிக்கையான நீட் உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளை மாநில அரசுகளின் விருப்பப்படி நடத்திக் கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்துக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.400-ஆக அதிகரிக்கப்படும். மீனவ மக்களின் படகுகள் பறிமுதல், மீனவா்கள் உயிரிழப்பு தடுத்து நிறுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை ‘பொய் மூட்டை’ என்று பாஜக விமா்சித்துள்ளது.
இன்று(ஏப். 6) உத்தர பிரதேசத்தின் சாஹரான்பூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, இன்றைய இந்தியாவின் எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் தொடர்பில் இல்லை என்பது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை மூலம் நிரூபனமாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, சுதந்திரப் போராட்ட காலத்தில் முஸ்லீம் லீக் கொண்டிருந்த சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது. முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாகக் கொண்டுள்ளது. இடதுசாரி சித்தாந்தத்தையும் கொண்டுள்ளது.அதில் காங்கிரஸை காணவில்லை என்று விமர்சித்துள்ளார்.
தேச விடுதலைக்காக பாடுபட்ட காங்கிரஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே முடங்கிவிட்டது என்பதை நாடு முழுவதும் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது. எஞ்சியிருக்கும் காங்கிஸிடம் தேச நலனுக்கான கொள்கைகளோ, நாட்டின் முன்னேற்றம் குறித்த பார்வையோ இல்லை. ஆகவே, 21-ஆம் நூற்றாண்டில் காங்கிரஸால் இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று விமர்சித்துள்ளார்.