FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிரம்ப்பின் செயல்பாட்டை மதிப்பிட்ட தேர்தல்

குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்துழைப்பை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

12 நவம்பர் 2026, 5:19 am
டொனால்ட் டிரம்ப் - கோப்புப்படம்
பகிர்:

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இடைக்காலத் தேர்தல் அதிபரின் ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் அரசியல் மதிப்பீடாகப் பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சி அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையையும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

செனட்டில் குடியரசுக் கட்சிக்கு 53 இடங்களும், ஜனநாயகக் கட்சிக்கு 45 இடங்களும் இருந்தன. இரண்டு சுயேச்சை உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து செயல்பட்டனர். பிரதிநிதிகள் அவையிலும் குடியரசுக் கட்சிக்கு மிகக் குறுகிய பெரும்பான்மை இருந்தது. இந்தச் சூழ்நிலையில் நடைபெற்ற, 2026 இடைக்கால தேர்தல் டிரம்ப் நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அளவிடும் முக்கியமான தேர்தலாக அமைந்தது.

Advertisement

Advertisement

குடியரசுக் கட்சியின் பின்னடைவுக்கு விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதாரம் போன்றவை அடிப்படைக் கூறுகளாகக் கருதப்படுகின்றன. உலக அரசியலில் அமெரிக்காவுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. பொருளாதாரம், ராணுவ வலிமை, தொழில்நுட்ப வளர்ச்சி, சர்வதேச உறவுகள், உலக வர்த்தகம் எனப் பல துறைகளில் அமெரிக்காவின் முடிவுகள் உலக நாடுகளின் எதிர்காலத்தையும் பாதிக்கின்றன.

அமெரிக்க நாடாளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்டது. ஒன்று, பிரதிநிதிகள் அவை, மற்றொன்று செனட் சபை. இந்த இரண்டு அவைகளிலும் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே அதிகாரப் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடியரசுக் கட்சியின் அரசியல் வளர்ச்சி, ஜனநாயகக் கட்சியின் சவால்கள், டொனால்ட் டிரம்ப்பின் அரசியல் செல்வாக்கு, அமெரிக்க மக்களின் பொருளாதார எதிர்பார்ப்புகள், குடியேற்றக் கொள்கை, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் சர்வதேச உறவுகள் ஆகியவற்றை ஆராய வேண்டியுள்ளது.

1854-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியரசுக் கட்சி அடிமைத்தனத்தை விரிவுபடுத்துவதற்கு எதிரான அரசியல் இயக்கத்தின் பின்னணியில் தோன்றியது. ஆபிரகாம் லிங்கன் இந்தக் கட்சியின் முதல் அதிபராக 1861-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். காலப்போக்கில் இக்கட்சி பழைமைவாதக் கொள்கைகள், குறைந்த அரசியல் தலையீடு, வரிச் சுமையைக் குறைத்தல், எல்லைப் பாதுகாப்பு, வலுவான ராணுவம், குடியேற்றக் கட்டுப்பாடு போன்றவற்றை வலியுறுத்தும் கட்சியாக வளர்ந்தது.

டொனால்ட் டிரம்ப்பின் வருகைக்குப் பிறகு, குடியரசுக் கட்சியின் அரசியல் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. தேசியவாதம், அமெரிக்காவுக்கு முன்னுரிமை, கடுமையான குடியேற்றக் கொள்கை, வர்த்தகப் பாதுகாப்பு, சீனா உடனான பொருளாதாரப் போட்டி போன்றவை கட்சியின் முக்கிய அரசியல் முழக்கங்களாக மாறின.

ஜனநாயகக் கட்சி அமெரிக்காவின் பழைமையான அரசியல் கட்சிகளில் ஒன்று. 1820-களில் ஆண்ட்ரு ஜாக்சனின் அரசியல் இயக்கத்தின் வழியாக அதன் நவீனக் கட்சி அமைப்பு உருவானது. காலப்போக்கில் இந்தக் கட்சி சமூக நலத் திட்டங்கள், தொழிலாளர் உரிமைகள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி வாய்ப்புகள், சமூக சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிமக்கள் முன்னுரிமை போன்றவற்றை முன்னிறுத்தும் கட்சியாக வளர்ந்தது.

பாரக் ஒபாமா, பில் கிளிண்டன், ஜோ பைடன் போன்ற தலைவர்கள் இந்தக் கட்சியின் முக்கியமான அதிபர்களாகப் பணியாற்றியுள்ளனர். கமலா ஹாரிஸ் 2024-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்டார். இரண்டு கட்சிகளுமே அமெரிக்க மக்களின் ஆதரவுகளைப் பெறுவதற்காக வெவ்வேறு பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளை முன்வைக்கின்றன.

அமெரிக்க அரசியலில் ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், அங்கு அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே முழுமையான அரசியல் அதிகாரத்தை வழங்குவதில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆதரவு இருப்பதும், ஆட்சியின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது.

100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில், ஜனநாயகக் கட்சி 54 இடங்களையும், குடியரசுக் கட்சி 44 இடங்களையும் பெற்றுள்ளது. 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில், ஜனநாயகக் கட்சிக்கு 253 இடங்களும், குடியரசுக் கட்சிக்கு 157 இடங்களும் கிடைத்திருக்கின்றன. இதன்மூலம் ஜனநாயகக் கட்சி செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் எழுச்சிக்கான முக்கியக் காரணங்களாக கருதப்படுகிறவை, அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்திருக்கின்றன. எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்களின் விலையேற்றம், டிரம்ப் அரசின் கொள்கைகள் குறித்த விமர்சனங்கள், இளைஞர்களின் வாக்கு ஆதரவில் ஏற்பட்ட மாற்றம், நாடாளுமன்ற அதிபரின் அதிகாரத்தை சமநிலைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, 30 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்களில், சுமார் 70 சதவீதம் பேர் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் சபை வேட்பாளர்களை ஆதரித்துள்ளனர்.

மேலும், சுமார் 60 சதவீத வாக்காளர்கள் டிரம்ப்பின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ளனர். இதில் இருந்து தெரியும் செய்தி என்னவென்றால், தேர்தலில் வாக்காளர்கள் கட்சிகளை மட்டும் மதிப்பிடுவதில்லை; ஆட்சியின் செயல்பாட்டையும் மதிப்பிடுகிறார்கள். இவற்றில் குடியரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்களும், ஜனநாயகக் கட்சியின் சவால்கள் குறித்து நிறைய பேசப்படுகின்றன.

2026 இடைக்கால தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஆராயும்போது, சில முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களைப் பார்க்க வேண்டும். ஈரானுடன் போர் தொடங்கியதுமுதல் தொடர்ந்து எரிபொருள் உயர்ந்திருக்கிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்விக் கடன், வீட்டுவசதி, மருத்துவச் செலவு, எதிர்கால பாதுகாப்பு போன்றவற்றில் அதிக அக்கறை காட்டுகின்றனர். ஆகவேதான், இளைஞர்கள் தங்களது ஆதரவை ஜனநாயகக் கட்சிக்கு வழங்கியிருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலின் விளைவுகளில் இந்தியா கவனிக்க வேண்டிய முக்கியத் துறைகளாக இருப்பவை, இந்திய பொருள்களின் மீதான அமெரிக்க இறக்குமதி வரிகள், இந்திய -அமெரிக்கா வர்த்தக உறவுகள், இந்திய மாணவர்களின் கல்வி மற்றும் நுழைவு இசைவு (விசா) நடைமுறைகள், ஹெச்1பி விசா மற்றும் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் இந்தோ- பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு, அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் குடியேற்ற உரிமைகள்- இவை குறித்து நுட்பமாக இந்தியா கவனிக்க வேண்டும்.

டிரம்ப்பின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு இந்தத் தேர்தலில் தவிடுபொடியாகி விட்டது. இதில் இருந்து ஒரு முக்கிய அரசியல் பாடத்தை நாம் கற்றாக வேண்டும். ஒரு தலைவரின் பிரபலத் தன்மையும், ஆளுங்கட்சியின் தேர்தல் வெற்றியும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை. ஜனநாயகக் கட்சி எதிர்கொள்ள வேண்டிய பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வது, மருத்துவச் செலவைக் கட்டுப்படுத்துவது, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது, குடியேற்றப் பிரச்னைக்கு நடைமுறைத் தீர்வு காண்பது, அரசியல் பிளவுகளைக் குறைப்பது, ஆட்சியின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது- இவை ஜனநாயகக் கட்சி எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பொறுப்புகள் ஆகும்.

தேர்தலில் எதிர்க்கட்சியாக வெற்றி பெறுவது ஒரு நிலை; ஆட்சியின் செயல்பாட்டில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது மற்றொரு நிலை. எனவே, ஜனநாயகக் கட்சியின் தேர்தல் வெற்றி, அதன் எதிர்கால ஆட்சி செயல்பாட்டின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படும். ஜனநாயகக் கட்சி இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றுள்ளதால், 2027 ஜனவரி மாதம் புதிய நாடாளுமன்றம் பொறுப்பேற்ற பிறகு, டிரம்ப் அரசின் கொள்கைகளை ஆய்வு செய்வதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் அதிக வாய்ப்புகள் உருவாகும்.

அரசின் செலவினங்கள், வர்த்தகக் கொள்கைகள், வெளிநாட்டுக் கொள்கைகள், குடியேற்ற நடவடிக்கைகள் போன்றவற்றில் நாடாளுமன்றக் கண்காணிப்பு அதிகரிக்கலாம். ஆனால், அமெரிக்க அதிபருக்கு 'வீட்டோ' அதிகாரம் இருப்பதால், ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்று விட்டது என்பதற்காக, அதிபர் டிரம்ப்பின் அனைத்து முடிவுகளையும் உடனடியாக மாற்றி விட முடியாது. சட்டம் இயற்றுவதிலும், செனட்டின் நடைமுறைகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்று அமெரிக்கா. அந்நாட்டின் வரிவிதிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, வட்டி விகிதம், அரசின் கடன் கொள்கை போன்றவை உலகச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்க அரசியல் முடக்க நிலை உருவானால், அது சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பாதிக்கும். எனவே, குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்துழைப்பை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

ஜனநாயகக் கட்சி தனது தேர்தல் வெற்றியை நிலையான மக்கள் ஆதரவாக வரும் குடியரசுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக மாற்றிக் காட்ட வேண்டும். குடியரசுக் கட்சியோ தனது தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, பொருளாதாரம், இளைஞர்கள், நடுத்தர வர்க்கம், குடியேற்றம், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் தனது அரசியல் அணுகுமுறையை அது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அமெரிக்க நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.