முகப்பு
இந்தியா

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் வழிகாட்டி கைது!

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் வழிகாட்டியை ராணுவத்தினர் கைது செய்தனர்.

Updated On : 23 ஆகஸ்ட் 2024, 11:45 am IST
ஜாஹிர் உசேன் ஷா - படம் | ஏஎன்ஐ
பகிர்:

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் வழிகாட்டியை ராணுவத்தினர் கைது செய்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த லஷ்கர் -இ-தொய்பா பயங்கரவாதக் குழுவின் வழிகாட்டியான ஜாஹிர் உசேன் ஷா என்பவரை ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்தின் திட்டங்களை முறியடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய ராணுவம் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் பிர் பஞ்சாலுக்கு தெற்கே உள்ள உயரமானப் பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை அழிக்கவும், பயங்கரவாத நடவடிக்கைகளைச் சமாளிக்கவும் இந்திய ராணுவமும் பாதுகாப்புப் படை வீரர்களும் 10-க்கும் மேற்பட்ட படைகளையும், 500-க்கும் மேற்பட்ட சிறப்புப் படை வீரர்களையும் பீர் பஞ்சால் எல்லைக்கு தெற்கே உள்ள பகுதிகளில் நிலைநிறுத்தியுள்ளது.

இயற்கைக் குகைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்ட மறைவிடங்களில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை பிடிப்பதற்காகவும் இந்திய ராணுவம் வனப்பகுதிகளில் தேடுதல் பணிகளை தொடங்கியுள்ளது.

ரஜௌரி, பூஞ்ச், உதம்பூர் மற்றும் தோடா மாவட்டங்கள் உள்பட ஜம்மு முழுவதும் பாதுகாப்பு பலப்பட்டுள்ளது. எந்தவிதத்திலும் பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க அப்பகுதியில் படைவீரர் உஷார் நிலையில் இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு முகமைகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பகுதிகளில் வசிக்கும் சில உள்ளூர்வாசிகள் பயங்கரவாதிகளுக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.

இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் சமீபத்தில் அப்பகுதியில் உள்ள பயங்கரவாதத்தின் நிலை குறித்து விவாதித்துள்ளனர். மேலும், அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உயர்நிலைத் தலைமை அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.