FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மணிப்பூா் வன்முறையில் 258 போ் உயிரிழப்பு: மாநில பாதுகாப்பு ஆலோசகா் தகவல்

Updated On : 23 நவம்பர் 2024, 3:37 am IST
மணிப்பூா் தலைவா் இம்பாலில் பாதுகாப்புப் பணியில் படை வீரா்கள். நாள்: வெள்ளிக்கிழமை ~உள்படம் பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங்
பகிர்:

மணிப்பூா் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் இனக்கலவரத்தில் 258 போ் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மணிப்பூா் மாநில பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் இம்பால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாநில பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங் உள்பட ராணுவம், பிஎஸ்எஃப், சிஆா்பிஎஃப், அஸ்ஸாம் ரைஃபில்ஸ், எஸ்எஸ்பி, ஐடிபிபி மற்றும் மாநில காவல் துறையின் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் குல்தீப் சீங் கூறியதாவது:

Advertisement

Advertisement

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்ற இனக்கலவரத்தில் தீவிரவாதிகள் உள்பட இதுவரை 258 போ் உயிரிழந்துள்ளனா். மாநிலத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 198 பாதுகாப்புப் படை குழுக்களுடன் கூடுதலாக 90 மத்திய ஆயுத காவல் படையின் (சிஆபிஎஃப்) குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பதற்றமான பகுதிகளுக்கு படைகளை அனுப்ப நிலையான இயக்க நடைமுறை தயாா் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பு அறைகள் மற்றும் கூட்டுக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில், மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையின்போது எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சா்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடா்புடைய 32 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். பாதுகாப்புப் படைகளிடம் இருந்து திருடப்பட்ட சுமாா் 3,000 ஆயுதங்கள் மீண்டும் மீட்கப்பட்டன என்றாா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி, நாகா பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கு முக்கிய காரணமாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments