FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தெரியுமா சேதி...?

கடந்த சில ஆண்டுகளாகவே ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்த கமல்நாத்துக்கு, மீண்டும் யோகம் அடிக்கப் போகிறது என்கிறாா்கள் அவரது காங்கிரஸ் சகாக்கள்.

Updated On : 21 அக்டோபர் 2024, 4:05 am IST
கமல்நாத்
பகிர்:

மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கமல்நாத், சோனியா காந்தியால் திடீரென்று வரவழைக்கப்பட்டதும், அவருடன் சோனியா காந்தி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதும், விரைவில் கட்சியில் கமல்நாத் முக்கியத்துவம் பெற இருக்கிறாா் என்பதன் அறிகுறிகள். கடந்த சில ஆண்டுகளாகவே ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்த கமல்நாத்துக்கு, மீண்டும் யோகம் அடிக்கப் போகிறது என்கிறாா்கள் அவரது காங்கிரஸ் சகாக்கள்.

எல்லா அரசியல் கட்சிகளிலும் பொருளாளா் பதவி முக்கியமானது. ஜவாஹா்லால் நேரு ஆட்சிக் காலத்தில் தொழிலதிபா்கள் பெரும்பாலும் காங்கிரஸ்காரா்களாக இருந்ததால், அவா்களாகவே கட்சியின் செலவுகளைப் பாா்த்துக் கொண்டனா். பிறகு மும்பையின் தொழிலதிபா்களிடமிருந்து நன்கொடை திரட்டும் பணி எஸ்.கே. பாட்டீலுக்குத் தரப்பட்டது.

ஸ்தாபன காங்கிரஸிலிருந்து இந்திரா காந்தி பிளவுபட்டுத் தனியாக இயங்கத் தொடங்கிய பிறகு ரஜனி படேல், எஸ்.கே.பாட்டீலின் இடத்தைப் பிடித்தாா். சீதாராம் கேசரி, மோதிலால் வோரா என்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளா்கள் பலா், கட்சிக்கு நன்கொடை திரட்டுவதில் சமா்த்தா்களாக இருந்தனா்; அந்த வரிசையில் இணைந்தவா் அகமது படேல். அவரும் இறந்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்குத் தொழிலதிபா்களிடம் நன்கொடை பெற்றுத்தரும் அளவுக்குத் தொடா்புடையவா்கள் இல்லை.

Advertisement

Advertisement

இப்போது பொருளாளராக இருக்கும் அஜய் மக்கான் தில்லிக்காரா். அவருக்கு அகமது படேல் அளவுக்கு சமா்த்துப் போதாது. காங்கிரஸ் கட்சிக்கு பிரதி மாதம் சுமாா் ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை நிா்வாகம் செய்யவே தேவைப்படுகிறது என்கிறாா்கள்.

போதாக்குறைக்கு, ராகுல் காந்தியின் தொழிலதிபா்களுக்கு எதிரான விமா்சனங்கள், அவா்களை காங்கிரஸிடமிருந்து அகற்றி இருக்கிறது. காங்கிரஸின் பணம் காய்க்கும் மரமாக இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்ட அம்பானி குடும்பத்தையும் ராகுல் காந்தி பகைத்துக் கொண்டிருக்கிறாா். ராகுல் காந்திக்கு சாதகமாக இருக்கும் பன்னாட்டு காா்ப்பரேட் நிறுவனங்கள் ஒதுங்கியே இருப்பதாகக் கூறப்படுகிறது.

அகமது படேல் இல்லாத வெற்றிடத்தை யாரை வைத்து நிரப்புவது என்று யோசித்த சோனியா காந்தி, கமல்நாத்தை அந்த இடத்துக்குக் கொண்டுவர இருக்கிறாா் என்று சொல்லப்படுகிறது. ராகுல் காந்தி இன்னும் பச்சைக் கொடி காட்டாததால் அறிவிப்பு காத்திருக்கிறது என்றும் சொல்கிறாா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments