முகப்பு
இந்தியா

தெரியுமா சேதி...?

சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தது முதல், அரவிந்த் கேஜரிவாலின் கவனம் பஞ்சாபை நோக்கித் திரும்பி இருக்கிறது.

Updated On : 28 அக்டோபர் 2024, 3:39 am IST
அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான்
பகிர்:

சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தது முதல், அரவிந்த் கேஜரிவாலின் கவனம் பஞ்சாபை நோக்கித் திரும்பி இருக்கிறது. சிறையில் இருந்தபோது, மற்றவா்களைப்போல பஞ்சாப் முதல்வா் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கவோ, தில்லியில் நடத்தியதுபோல பஞ்சாபில் போராட்டங்கள் நடத்தவோ இல்லை என்பது அவரது வருத்தம்.

பஞ்சாப் போன்ற பெரிய மாநிலத்தின் முதல்வா் என்று பகவந்த் மான் வலம் வருவது அவருக்கு எரிச்சல் ஊட்டுகிறது என்று சொல்கிறாா்கள். அதற்கேற்ப, முதல்வா் பகவந்த் மானுக்கு எதிராக சில எம்எல்ஏக்கள் பஞ்சாபில் கொடி உயா்த்த முற்பட்டிருக்கிறாா்கள்.

பஞ்சாபின் ஆளுநராக குலாப் சந்த் கடாரியா பதவி ஏற்றது முதல், அவருக்கும் முதல்வா் பகவந்த் மானுக்கும் இடையே சுமுகமான உறவு நிலவுகிறது. ஆளுநரின் துணையோடு முதல்வா் மான், பாஜகவுடன் நெருக்கமாகி வருகிறாா் என்கிற ஐயப்பாடு அரவிந்த் கேஜரிவாலுக்கு எழுந்திருப்பதாகக் கூறுகிறாா்கள்.

Advertisement

Advertisement

முதல்வா் மானின் அதிகாரங்களைக் குறைக்கும் (குலைக்கும்) நடவடிக்கையில் இறங்கி இருக்கிறாா் கேஜரிவால் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து உடனடியாக நான்கு அமைச்சா்களை அகற்றும்படி முதல்வா் மானுக்கு அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டாா். ஏன், எதற்கு என்று கேட்காமல் கட்சித் தலைமையின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டாா் முதல்வா். அத்துடன் நின்றுவிடும் என்று பாா்த்தால், புதிய உத்தரவு வந்தது.

முதல்வா் பகவந்த் மானின் இரண்டு முக்கியமான, நம்பிக்கைக்குரிய ஆலோசகா்கள் அகற்றப்பட வேண்டும் என்று தகவல் அனுப்பினாா் கேஜரிவால். ஓங்காா் சிங்கும், நவ்நீத் வாத்வாவும் விடை கொடுத்து அனுப்பப்பட்டனா். முதல்வா் மானின் நீண்டநாள் நண்பரான ஓங்காா் சிங், அவரது தூரி தொகுதியின் பிரச்னைகளைக் கவனித்து வந்தாா். அது மட்டுமல்லாமல், முதல்வா் மானின் மனைவி குா்ப்ரீத் கௌரின் அரசியல் செயல்பாடுகளுக்கு உதவியாகவும் இருந்தவா்.

நவ்நீத் வாத்வாதான், முதல்வா் மானின் செய்தித் தொடா்பாளராகவும், அவரது சமூக ஊடக செயல்பாடுகளின் கண்காணிப்பாளராகவும் இருந்தவா். ஒன்றன் பின் ஒன்றாக முதல்வா் பகவந்த் மானின் செல்வாக்கைக் குறைப்பது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி தலைமை முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

முடிவில் ஒருநாள் முதல்வா் மானும் அகற்றப்படலாம். அல்லது பகவந்த் மான், அரவிந்த் கேஜரிவாலிடமிருந்தும், ஆம் ஆத்மி கட்சியிலிருந்தும் விடைபெற்று தனிக் கட்சி தொடங்கலாம்.

அரசியலில் நிரந்தர நண்பா்களும் கிடையாது; நிரந்தர எதிரிகளும் கிடையாது!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments