FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வங்கதேசத்தினர் ஊடுருவலால் பெரும் அச்சுறுத்தல்: ஜார்க்கண்டில் பிரதமர் மோடி

ஜார்க்கண்டில் வாக்கு வங்கி அரசியலுக்காக, வங்கதேசத்தினர் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கயாக்களின் ஊடுருவலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான மாநில அரசு அனுமதிக்கிறது.

Updated On : 16 செப்டம்பர் 2024, 2:55 am IST
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி.
பகிர்:

ஜார்க்கண்டில் வாக்கு வங்கி அரசியலுக்காக, வங்கதேசத்தினர் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கயாக்களின் ஊடுருவலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான மாநில அரசு அனுமதிக்கிறது; இது, இந்த மாநிலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மேலும், காங்கிரஸ் ஊழல் நிறைந்த கட்சி என்றும் அவர் விமர்சித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

ஜார்க்கண்டில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இம்மாநிலத்தில் ரூ.660 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.

ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள டாடாநகரில் அரசு நிகழ்ச்சியில் அவர் முதலில் பங்கேற்கவிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ராஞ்சியில் இருந்தபடி, காணொலி முறையில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார். மேலும், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயக்கப்படும் 6 புதிய வந்தே பாரத் ரயில் சேவையையும் அவர் தொடங்கிவைத்தார்.

பழங்குடியினருக்கு முன்னுரிமை: டாடாநகர் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர், 'பழங்குடியினர், ஏழைகள், தலித் சமூகத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. அவர்களுக்கு பலனளிக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஜார்க்கண்டின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இங்கு ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது 16 மடங்கு அதிகம். ரயில் பாதைகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் ஜார்க்கண்ட் இடம்பெற்றுள்ளது' என்றார்.

பொதுக் கூட்டத்தில் பங்கேற்பு: பின்னர், ராஞ்சியில் இருந்து சாலை மார்க்கமாக ஜாம்ஷெட்பூர் சென்ற பிரதமர், அங்குள்ள கோபால் மைதானத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி அரசை விமர்சித்து, அவர் பேசியதாவது:

வங்கதேசத்தினர், ரோஹிங்கயாக்கள் ஊருவலால், ஜார்க்கண்டின் சந்தால் பர்கனாஸ், கோலன் பிராந்தியங்களில் மக்கள்தொகை ரீதியிலான மாற்றம் வேகமாக நிகழ்ந்து வருகிறது. பழங்குடியினர் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது.

ஊராட்சி அமைப்புகளில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தும் ஊடுருவல்காரர்கள், நில அபகரிப்பு மற்றும் நமது மகள்களுக்கு எதிரான அராஜகங்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.

ஊடுருவலை ஆதரிக்கும் மாநில அரசு: வாக்கு வங்கி அரசியலுக்காக, ஊடுருவல்காரர்கள் மற்றும் சட்டவிரோத அகதிகளுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு ஆதரவளிக்கிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் ஜார்க்கண்டின் மிகப் பெரிய எதிரிகள். அதிகார பசி கொண்ட இக்கட்சிகளுக்கு வாக்குவங்கி அரசியலே முதன்மையானது. பழங்குடியினரை அவமதிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு மக்கள் தக்க பதிலடி தர வேண்டும்.

ஊழல் நிறைந்த காங்கிரஸ்: மிகவும் ஊழல் நிறைந்த கட்சி காங்கிரஸ். அக்கட்சியின் 'ஊழல் பள்ளியில்' பயிற்சி பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, இம்மாநிலத்தில் சுரங்கம், கனிமம், ராணுவ நிலம் என ஊழலில் திளைக்கிறது. தங்களின் நிலம் அபகரிக்கப்படாமல் காக்க, 'இந்த நிலம் விற்பனைக்கு இல்லை' என்ற அறிவிப்பை வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஊழலில் மூழ்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இம்மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருவது உறுதி.

நம்பிக்கையை காப்பேன்: சமீபத்திய மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பெரிய சதித் திட்டத்தை தீட்டி, வதந்திகளைப் பரப்பின. நாட்டை பிளவுபடுத்த அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்தன. ஆனால், நாட்டு மக்கள் பாஜகவுக்கே வாக்களித்தனர். மக்களின் நம்பிக்கையை எப்போதும் காப்பேன்.

சிறப்பு திட்டங்களின் மூலம் பழங்குடியின இளைஞர்களுக்கு கல்வி-வேலைவாய்ப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம். முந்தைய ஆட்சிக் காலங்களில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மாவட்ட கனிமவள நிதியின் மூலம் இயற்கை வளங்களின் பாதுகாப்பை உறுதி செய்தது பாஜக அரசு என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments