‘இந்தியா’ கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளா் அவசியம்: சஞ்சய் ரௌத்
‘இந்தியா’ கூட்டணிக்கு தலைவா், ஒருங்கிணைப்பாளா் நியமிக்கப்படுவது அவசியம் என்று சிவசேனை (உத்தவ் பிரிவு) மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.
‘இந்தியா’ கூட்டணிக்கு தலைவா், ஒருங்கிணைப்பாளா் நியமிக்கப்படுவது அவசியம் என்று சிவசேனை (உத்தவ் பிரிவு) மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.
மும்பையில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவரிடம் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறதே என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘இதுவரை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் தலைவா், ஒருங்கிணைப்பாளா் நியமனம் குறித்து விவாதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் கூட்டணிக்கு தலைவா் அவசியம் என்று எங்கள் கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே கூட்டணிக் கூட்டத்தில் வலியுறுத்தினாா்.
Advertisement
Advertisement
கூட்டணியின் தலைவராக மற்றும் பிரதமா் வேட்பாளராக அறிவிக்கப்படுபவா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது’ என்றாா்.
தில்லியில் நடைபெற்ற கடந்த கூட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை முன்னிறுத்தலாம் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் கருத்து தெரிவித்தனா். ஆனால், இதை ஏற்க மறுத்த காா்கே, முதலில் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்ற பிறகு பிரதமா் பதவி குறித்து ஆலோசிக்கலாம் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் முக்கிய எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஆனால், இக்கூட்டணியில் தொகுதிப் பங்கீடு என்பது பெரும் சிக்கலாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முக்கியமாக பிராந்திய அளவில் வலுவாக உள்ள கட்சிகள், காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்க முன்வராது என்று கூறப்படுகிறது.
மகாராஷ்டிரத்தில் இப்போது காங்கிரஸுக்கு எம்.பி.க்கள் யாரும் இல்லாததால் அக்கட்சியுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று சிவசேனை ஏற்கெனவே கூறியுள்ளது.
இதேபோல மம்தா பானா்ஜியும் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என்று கூறியுள்ளாா்.