முகப்பு
இந்தியா

வெறுப்பு அரசியலை முன்னெடுக்க சிலருக்கு மதம் தேவை: நிஷிகாந்த் துபே கருத்துக்கு குரேஷி பதிலடி

‘இந்திய நாட்டில் ஒரு தனிநபரின் பங்களிப்புள் மூலமே அவருக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற கருத்தின் மீது ஆழமான நம்பிக்கைகொள்கிறேன்.

Updated On : 22 ஏப்ரல் 2025, 5:06 am IST
எஸ்.ஒய்.குரேஷி
பகிர்:

புது தில்லி: ‘இந்திய நாட்டில் ஒரு தனிநபரின் பங்களிப்புள் மூலமே அவருக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற கருத்தின் மீது ஆழமான நம்பிக்கைகொள்கிறேன். ஆனால் சிலருக்கு வெறுப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்ல மத அடையாளங்கள் தேவைப்படுகின்றன’ என முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எஸ்.ஒய்.குரேஷி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த குரேஷி தனது பதவிகாலத்தில் முஸ்லிம் ஆணையராகவே செயல்பட்டாா் என பாஜக எம்.பி.நிஷிகாந்த் துபே ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா்.

அதற்கு பதிலடி தரும் விதமாக பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குரேஷி இவ்வாறு தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அவா் மேலும் கூறுகையில், ‘ஐஏஎஸ் அதிகாரியாகவும் தலைமை தோ்தல் ஆணையராகவும் என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டுள்ளேன். இந்திய நாட்டில் ஒருவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் அவரது திறன் அல்லது பங்களிப்புகளை சாா்ந்தது என்ற கருத்தின் மீது ஆழமான நம்பிக்கை உள்ளது. மாறாக மதத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணக்கூடாது.

ஆனால் வெறுப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்ல சிலருக்கு மதரீதியான அடையாளங்கள் தேவைப்படுகின்றன. அரசமைப்புச் சட்ட நிறுவனங்கள் மற்றும் கொள்கைகளை பாதுகாக்க இந்தியா எப்போதும் போராடும்’ என்றாா்.

நாட்டின் 17-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையராக கடந்த 2010-12 காலகட்டத்தில் குரேஷி பணியாற்றினாா்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த 17-ஆம் தேதி எஸ்.ஒய். குரேஷி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘வக்ஃப் திருத்தச் சட்டமானது, முஸ்லிம்களின் நிலங்களை அபகரிப்பதற்கான மத்திய அரசின் அப்பட்டமான தீய சட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இச்சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். விஷமத்தனமான பிரசாரத்தை மேற்கொள்ளும் ‘இயந்திரம்’, தவறான தகவலைப் பரப்பும் தனது வேலையை நன்றாக செய்துள்ளது’ என குறிப்பிட்டாா்.

சமாஜவாதி, கம்யூனிஸ்ட் கண்டனம்: குரேஷியை விமா்சித்து கருத்து தெரிவித்த நிஷிகாந்த் துபேவுக்கு சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்ட் பொதுச்செயலா் டி.ராஜா, சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் சஞ்சய் ரௌத் ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments