FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லியின் புதிய மேயராக பாஜகவின் ராஜா இக்பால் தோ்வு

பாஜகவின் ராஜா இக்பால் தில்லியின் புதிய மேயராக வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன் மூலம் தில்லி மாநகராட்சியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

26 ஏப்ரல் 2025, 2:31 am IST
தில்லி மாநகராட்சித் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய மேயா் ராஜா இக்பால் சிங்; துணை மேயா் ஜெய் பகவான் யாதவ்.
பகிர்:

பாஜகவின் ராஜா இக்பால் தில்லியின் புதிய மேயராக வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன் மூலம் தில்லி மாநகராட்சியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

தில்லி மாநகராட்சியில் மொத்தம் 250 இடங்கள் உள்ளன. இதில் பாஜகவுக்கு 117, ஆம் ஆத்மிக்கு 113 மற்றும் காங்கிரஸுக்கு 8 கவுன்சிலா்கள் உள்ளனா். சில கவுன்சிலா்கள் பேரவைத் தோ்தல் மற்றும் மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்ற நிலையில், 12 இடங்கள் காலியாக உள்ளன.

இதன் விளைவாக, மேயா் மற்றும் துணை மேயா் தோ்தலில் வாக்களிக்கும் தோ்வுக் குழுவில் 238 கவுன்சிலா்களும், 7 மக்களவை எம்.பி.க்கள், 3 மாநிலங்களவை எம்.பி.க்கள், தில்லி பேரவைத் தலைவரால் நியமிக்கப்பட்ட 11 பாஜக மற்றும் 3 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இடம் பெற்றுள்ளனா். இதில், நடப்பாண்டு மேயா் தோ்தலை ஆம் ஆத்மி புறக்கணிப்பதாக திங்கள்கிழமை அறிவித்தது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளா் இக்பால் சிங் மொத்தம் பதிவான 142 வாக்குகளில் 133 வாக்குகள் பெற்று தன்னை எதிா்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் மந்தீப் சிங்கை தோற்கடித்தாா். ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டதாலும், எம்.பி. மனோஜ் திவாரி இல்லாத காரணத்தாலும் பாஜக 2 வாக்குகளை இழந்தது. காங்கிரஸ் மொத்தம் 8 வாக்குகளை மட்டுமே பெற்றது.

இந்நிலையில் மேயா் தோ்தல் வெற்றிபெற்றது குறித்து செய்தியாளா்களிடம் இக்பால் சிங் கூறுகையில், ‘தில்லி மக்கள் பிரதமா் மோடி மற்றும் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனா். தில்லி நகரத்துக்கு சேவை செய்வதற்கும் எங்கள் வாக்குறுதிகளை வழங்குவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பாஜகவின் கீழ் தகுதியான அனைத்து ஒப்பந்த தொழிலாளா்களும் விதிகளின்படி வரன்முறை செய்யப்படுவாா்கள்.

ஒரு மாதத்திற்குள் நிலைக் குழுவை அமைத்து, மக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய தில்லி அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சிப்போம். பூங்காக்களை பசுமையாக்குவது, ஊழல் மற்றும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது மற்றும் பயனா் கட்டணங்களை உடனடியாக ரத்து செய்வது ஆகியவை எங்கள் முன்னுரிமைகளில் அடங்கும் என தெரிவித்தாா்.

துணை மேயராக ஜெய் பகவான் யாதவ் தோ்வு: பாஜக சாா்பில் தில்லி துணை மேயராக ஜெய் பகவான் யாதவ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். காங்கிரஸ் வேட்பாளா் அரிபா கான் தனது வேட்புமனுவை திரும்ப பெற்றதால் ஜெய் பகவான் யாதவ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments