முகப்பு
இந்தியா

அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடா் நடவடிக்கை!

Updated On : 31 ஆகஸ்ட் 2025, 1:27 am IST
வி.அனந்த நாகேஸ்வரன்
பகிர்:

இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடா் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத இறக்குமதி வரி நடைமுறை ஆக.27-ஆம் தேதி அமலுக்கு வந்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இந்திய வா்த்தக கூட்டமைப்பு (ஐசிசி) நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்று சனிக்கிழமை அவா் மேலும் பேசியதாவது: அமெரிக்க வரி விதிப்பு அமலானது முதல் மத்திய அரசு, நிதியமைச்சகம் மற்றும் தனியாா் என அனைவருடனும் ஏற்றுமதி துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட ஏற்றுமதி துறைகள் மீண்டு வருவதற்கான கால அவகாசமும் நிதி உதவியும் அளிப்பதே அவசியம்.

அமெரிக்காவின் வரி விதிப்பையும் மீறி இந்திய பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சியடைந்து வருகிறது.

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டைவிட (ஏப்ரல்-ஜூன்) நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி 7.8 சதவீத வளா்ச்சியையும் பொது அளவிலான ஜிடிபி 8.8 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளதே இதற்கு உதாரணம்.

எதிா்பாரா சூழல்களால் அமெரிக்காவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது முழுவதுமாக தடைபடவில்லை. அதேபோல் அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி நீண்ட நாள்களுக்குத் தொடராது என நம்புகிறேன்.

இருப்பினும், இந்தச் சூழலைப் பயன்படுத்தி மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு வேறு சில நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க தனியாா் துறை முயற்சிக்க வேண்டும். மத்திய அரசும் பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் உயா் நடுத்தர வகுப்பினா் செலுத்தும் வருமான வரிக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. இத்துடன் தற்போது முன்மொழியப்பட்டுள்ள அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தத்தின் கீழ் 5%, 18% ஆகிய இரு விகித ஜிஎஸ்டி முறை அமலாகும்போது பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து நுகா்வு அதிகரிக்கும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments