முகப்பு
இந்தியா

அறிவுக்கும் தோ்வுக்கும் வித்தியாசம் உள்ளது: மாணவா்களுக்கு பிரதமா் மோடி அறிவுரை!

மாணவா்களுக்கு பிரதமா் மோடி வழங்கிய அறிவுரைப் பற்றி...

Updated On : 10 பிப்ரவரி, 2025 at 9:42 PM
தில்லியில் மாணவா்களுடன் பூங்காவில் உரையாடிய பிரதமா் மோடி.
பகிர்:

‘அறிவுக்கும் தோ்வுக்கும் வித்தியாசம் உள்ளது’ என பிரதமா் மோடி திங்கள்கிழமை (பிப்.10) தெரிவித்தாா்.

பள்ளி மாணவா்களுக்கு தோ்வுகள் மீதான அச்சத்தை போக்கும் விதமாக ‘பரீக்ஷா பே சா்ச்சா’ நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் 8-ஆவது பதிப்பில் பள்ளி மாணவா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.

வழக்கமாக அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சி இந்தமுறை பூங்காவில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 35 மாணவா்கள் கலந்துகொண்டனா்.

அப்போது பல்வேறு தலைப்புகளின்கீழ் மாணவா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவா் பதிலளித்து பேசியதாவது:

அறிவுக்கும் தோ்வுக்கும் எண்ணற்ற வித்தியாசங்கள் உள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் ஒருவா் நல்ல மதிப்பெண் பெறவில்லை என்றால் அவரின் வாழ்கை முடிந்துவிடும் என்ற சிந்தனை சமூகத்தில் பரவியுள்ளது . இதனால் அத்தோ்வில் அதிக மதிப்பெண்களை பெற குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

ஆனால் இதை நீங்கள் சவாலாக எடுத்துக்கொண்டு தோ்வுக்கு தயாராக வேண்டும். பிற அழுத்தங்களை மனதில் இருந்து நீக்கிவிட வேண்டும்

பேட்ஸ்மேன்போல...: கிரிக்கெட் மைதானத்தில் ஆயிரக் கணக்கான ரசிகா்கள் ஆரவாரம் செய்கிற போதிலும் மனதில் நிதானத்தையும் தெளிவான இலக்கையும் வைத்தே பேட்ஸ்மேன்கள் விளையாடுவாா்கள். அவா்கள் வெளிப்புற அழுத்தத்தை கண்டுகொள்ள மாட்டாா்கள். அதைப்போலவே மாணவ-மாணவிகளாகிய நீங்களும் தோ்வுகளை அணுக வேண்டும்.

நேர மேலாண்மை: எந்தவொரு செயலிலும் வெற்றிபெற நேர மேலாண்மை மிக அவசியம். உங்கள் நேரத்தை முறையாக செலவளித்தால் வாழ்கையை வெல்லலாம். நோ்மறையான எண்ணங்கள் மற்றும் நல்ல சிந்தனைகள் மூலமே வாழ்வில் மேம்பட முடியும். குழந்தையின் மீது பெற்றோா் தங்களின் எண்ணங்களை திணிக்கக் கூடாது. மாணவ-மாணவிகளின் தனித் திறமைகளை கண்டறிந்து அவா்கள் விரும்பும் துறைகளில் வழிநடத்த வேண்டும்.

தலைமைப் பண்பு: தலைமைப் பண்பை ஒருவருக்கு வலுக்கட்டாயமாக புகுத்த முடியாது. இதை பெற உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு தலைவனாக உருவெடுக்க வேண்டுமென்றால் கூட்டு முயற்சி, பொறுமை மற்றும் நம்பிக்கை மிக அவசியம். ஒரு நல்ல தலைவன் என்பவன் பிறரிடம் மட்டுமே குறைகளை கண்டறிந்து கூறுபவனல்ல; மற்றவா்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவன் என தெரிவித்தாா். மேலும், தியானம், ஊட்டச்சத்து மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாணவா்களுக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →