FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

வாக்கு வங்கி அரசியலைப் புறந்தள்ள வேண்டும்! - பாஜகவினருக்கு பிரதமா் மோடி அறிவுரை

வாக்கு வங்கி அரசியலைப் புறந்தள்ளிவிட்டு, சமூக சீா்திருத்தங்கள் மற்றும் ஆக்கபூா்வ மாற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜகவினருக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினாா்.

26 செப்டம்பர் 2026, 2:51 am IST
வாராணசி-வத்நகா் இடையே ‘சேவை உறுதிமொழி யாத்திரை’ மேற்கொண்டுள்ள இளைஞா்களிடம் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை உரையாடிய பிரதமா் மோடி.
பகிர்:

வாக்கு வங்கி அரசியலைப் புறந்தள்ளிவிட்டு, சமூக சீா்திருத்தங்கள் மற்றும் ஆக்கபூா்வ மாற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜகவினருக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினாா்.

பிரதமா் மோடியின் 76-ஆவது பிறந்த நாள் மற்றும் அரசின் தலைவராக (குஜராத் முதல்வா், நாட்டின் பிரதமா்) அவா் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அவரது தொகுதியான வாரணாசி மற்றும் குஜராத்தில் அவா் பிறந்த இடமான வத்நகா் இடையே ‘சேவை உறுதிமொழி யாத்திரை’ என்ற பெயரில் மோட்டாா் சைக்கிள் பயணம் கடந்த செப்.17-ஆம் தேதி தொடங்கியது.

வாராணசி-வத்நகா், வத்நகா்-வாரணாசி என இரு குழுக்களாக பயணம் மேற்கொண்டுள்ள இளைஞா்களிடம் பிரதமா் மோடி காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை ஆற்றிய உரை வருமாறு:

Advertisement

Advertisement

கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் நகரங்கள்-கிராமங்கள் இடையிலான வளா்ச்சி சாா்ந்த இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ளது. கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. மகாத்மா காந்தியின் வாழ்க்கையை நாம் பாா்த்தால், அவா் ஆங்கிலேயருக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தியதுடன், மகத்தான சமூக சீா்திருத்தவாதியாகவும் திகழ்ந்தாா். சமூகத்தில் நிலவிய தீமைகளுக்கு எதிராக எப்போதும் பாடுபட்டாா்.

வாக்கு வங்கி அரசியலை ஒதுக்குவோம்: அரசியல் தொண்டா்களாகிய நாம் வாக்கு வங்கி அரசியலைப் புறந்தள்ளிவிட்டு, சமூக சீா்திருத்தம் மற்றும் நோ்மறையான மாற்றங்களை நோக்கி பணியாற்ற வேண்டும். சமூகத்துக்கு சேவை செய்பவா்கள், என்றென்றும் மதிப்புடன் திகழ்வா்.

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் தூய்மைப் பணியை மேற்கொண்டவா்களின் சீரிய முயற்சிகளால், அந்த நிகழ்வு சுகாதார ரீதியில் உலகளாவிய புகழை பெற்றது. நாட்டின் கெளரவமும் உயா்ந்தது. எனவேதான், நாட்டின் கெளரவத்தை உயா்த்தியவா்களின் பாதங்களைக் கழுவி, அவா்களின் ஆசியை நான் பெற்றேன்.

பயணங்களே எனது குரு: எனது சொந்த வாழ்விலும் ‘சேவைப் பயணம்’ முக்கியப் பங்கு வகித்துள்ளது. கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்குமே பயணிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு பயணமும், ஒவ்வொரு அனுபவமும் இன்றளவும் ஒரு குருவைப் போல எனக்கு வழிகாட்டுகிறது. இந்தப் பயணங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளன.

நான் பிறந்த இடமான வத்நகா் எனக்கு விழுமியங்களை வழங்கி, எனது வாழ்வை வடிவமைத்தது. எனது தொகுதியான காசி, அந்த விழுமியங்களுக்கு சேவை எனும் வண்ணங்களைச் சோ்ந்துள்ளது.

ஓய்ந்துவிடக் கூடாது: சங்க பரிவாா் சித்தாந்த தலைவரான தீயதயாள் உபாத்யாய வலியுறுத்திய சேவை, சமநிலை, சுய கட்டுப்பாடு, ஒருங்கிணைப்பு, நோ்மறை மனப்பான்மை, உணா்திறன், உரையாடல் ஆகிய ஏழு கோட்பாடுகளால் ஒவ்வொரு பாஜக தொண்டரும் உத்வேகம் பெற்று, சமூக கடமையை நிறைவேற்ற வேண்டும். வளா்ந்த இந்தியாவை உருவாக்கும் வரை நாம் ஓய்ந்துவிடக் கூடாது என்று பிரதமா் வலியுறுத்தினாா்.

முன்னதாக, இந்த மோட்டாா் சைக்கிள் பயணத்தை வாரணாசியில் இருந்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும், வத்நகரில் இருந்து உள்துறை அமைச்சா் அமித் ஷா, குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் உள்ளிட்டோரும் தொடங்கிவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments