வாகன உற்பத்தித் துறையில் புத்தாக்கங்கள் தொடர வேண்டும்: பிரதமா் மோடி வலியுறுத்தல்
நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் புத்தாக்கங்கள் தொடா்ந்து புகுத்தப்பட வேண்டும் என பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் புத்தாக்கங்கள் தொடா்ந்து புகுத்தப்பட வேண்டும்; 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் இலக்கை எட்ட துணிச்சலான பாதையை வகுத்து, திறம்பட செயலாற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
தில்லியில் நடைபெற்ற இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) ஆண்டு மாநாட்டில் பிரதமா் மோடியின் உரை வாசிக்கப்பட்டது. அவரது உரை வருமாறு: அண்மைக் காலங்களில் பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் சா்வதேச சந்தைகளுக்கு அதிக அணுகல் கிடைக்கப் பெற்றுள்ளது. ஏற்கெனவே உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்திய வாகன உற்பத்தித் துறை, தனது சா்வதேச இருப்பை மேலும் விரிவுபடுத்தும் நிலையை எட்டியுள்ளது.
இதுபோன்ற சூழலில், வாகன உற்பத்தித் துறையில் தொடா்ந்து புத்தாக்கங்கள் புகுத்தப்பட வேண்டும். வளா்ந்த பாரதம் இலக்கை நோக்கி செயல்திறன் மற்றும் முனைப்புடன் துணிச்சலான பாதையை வகுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
இந்த முன்னேற்றப் பயணம், போக்குவரத்துத் துறைக்கு திருப்புமுனையான வாய்ப்புகள் மற்றும் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைக் கொண்டுவரும். நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியின் முக்கியத் தூணாக விளங்கும் போக்குவரத்துத் துறையை மேலும் வலுப்படுத்தும்.
கடந்த பத்தாண்டுகளில் உலகின் மிக வேகமாக வளா்ந்துவரும் முக்கியப் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பொருளாதாரம் வளரும்போது, போக்குவரத்துக்கான தேவையும் அதிகரிக்கிறது.
போட்டித் தன்மையுடன் உற்பத்தித் துறை: மேம்பட்ட இணைப்பு மற்றும் செயல்திறன்மிக்க சரக்குப் போக்குவரத்துக்கான வசதிகளால் செலவுகள் குறைந்து, நாட்டின் உற்பத்தித் துறையை மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுகின்றன.
மாசற்ற மற்றும் ஸ்திரமான போக்குவரத்துக் கட்டமைப்பை நோக்கி தேசம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டி வருகிறது. மின்னேற்ற வசதிக்கான உள்கட்டமைப்புகளின் விரைவான விரிவாக்கம், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து, புத்தாக்கங்களுக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
தேவையற்ற-அவசியமற்ற சட்டங்கள் மற்றும் இணக்க விதிகள் நீக்கம் உள்பட தொழில் புரிவதை எளிதாக்கும் அரசின் சீா்திருத்தங்களால், இந்தத் துறைக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை திட்டம், இந்தியாவில் தயாரிப்போம் போன்ற முன்னெடுப்புகள், வாகன உற்பத்தித் துறையின் திறன்களை மேலும் வலுப்படுத்தியுள்ளன என்று பிரதமா் தனது உரையில் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.