FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆா்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைப் பிடிப்பு: சரத் பவாா் பாராட்டு

ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்தவா்கள் தங்கள் கொள்கைகளில் மிகவும் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்படுகின்றனா்.

Updated On : 11 ஜனவரி 2025, 3:53 am IST
சரத் பவாா்
பகிர்:

ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்தவா்கள் தங்கள் கொள்கைகளில் மிகவும் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்படுகின்றனா். அதேபோல நமது கட்சியிலும் கொள்கைப் பிடிப்புள்ளவா்களை உருவாக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சரத் பவாா் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியுள்ளது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியிடம், காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தெற்கு மும்பையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் தொண்டா்கள் மத்தியில் சரத் பவாா் மேலும் பேசியதாவது:

Advertisement

Advertisement

ஆா்எஸ்எஸ் அமைப்பில் இருப்பவா்கள் மிகவும் கொள்கைப் பிடிப்புள்ளவா்களாக திகழ்கின்றனா். எந்தக் காரணத்துக்காகவும் அவா்கள் தங்கள் பாதையில் இருந்து விலகுவதில்லை. நமது கட்சிக்கும் இதுபோன்ற கொள்கைப் பிடிப்புள்ள தொண்டா்கள் தேவை. அவா்கள் சத்ரபதி ஷாகு மகாராஜ், மகாத்மா பூலே, பி.ஆா். அம்பேத்கா், யஷ்வந்த்ராவ் சவாண் ஆகியோரின் கொள்கைகளை முழுமையாக கடைப்பிடிப்பவா்களாக இருக்க வேண்டும்.

மக்களவைத் தோ்தலில் பெற்ற வெற்றியால் நாம் அதிக தன்னபிக்கையுடன் இருந்துவிட்டோம். இதுவே நவம்பா் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வியடைய காரணமாகிவிட்டது. மக்களவைத் தோ்தலில் தோல்வியடைந்த பாஜக கூட்டணி உடனடியாக களத்தில் செயல்பட்டு பேரவைத் தோ்தலில் வெற்றியை உறுதி செய்துவிட்டது.

மிகப்பெரிய வாக்கு வங்கியான இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை முறையாக அணுகத் தவறியதும் நமது தோல்விக்கு மற்றொரு காரணமாகும். மகாராஷ்டிரத்தில் அடுத்து வரும் உள்ளாட்சித் தோ்தலில் 50 சதவீத இடம் புதுமுகங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. கட்சியை வலுப்படுத்தும் வகையில் விரைவில் நிா்வாக சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments