முகப்பு
இந்தியா

வாடகைத் தாய் முறையில் இப்படி ஒரு மோசடியா? ஒரு குழந்தை ரூ.35 லட்சம்!

வாடகைத் தாய் முறையில் மிக மோசமான மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு குழந்தை ரூ.35 லட்சத்துக்கு விற்பனை

Updated On : 28 ஜூலை 2025, 2:12 pm IST
வாடகைத் தாய் முறைகேடு
பகிர்:

ஹைதராபாத்: செகுந்தராபாத்தில் செயல்பட்டு வந்த கருவுறுதல் மையத்தில், ஐவிஎஃப் முறையில், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பிய தம்பதியை ஏமாற்றிய ஒரு கும்பல் பற்றிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு ஏழைக் குடும்பத்திடமிருந்து பிறந்த குழந்தையை ரூ.90,000க்கு வாங்கி, அதனை நகரப் பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு, வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தை என்று ஏமாற்றி ரூ.35 லட்சம் பெற்ற சம்பவம் வெளியாகியிருக்கிறது.

தம்பதிக்கு, வாடகைத் தாய் மூலம் அவர்களது சொந்தக் குழந்தையைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதி அளித்த மருத்துவமனை, வேறொரு குழந்தையை வாங்கிக் கொடுத்து ஏமாற்றியிருக்கிறது.

Advertisement

Advertisement

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான இரண்டு மருத்துவர்கள் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடகைத் தாய் முறை என்ற பெயரில் குழந்தைகளை பணத்துக்கு விற்பனை செய்துவந்த ஒரு பெரிய கும்பல் தற்போது காவல்துறையிடம் சிக்கியிருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நடத்திய வந்த மேலும் மூன்று மருத்துவமனைகளும் மூடப்பட்டுவிட்டன.

இப்போது, இந்த வழக்கு மட்டுமே தற்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பதாகவும், இவர்கள் மேலும் இதுபோன்ற பல முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் வாடகைத் தாய் முறையில் குழந்தைபெற்ற மற்ற தம்பதிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை தொடங்கப்படவிருக்கிறது.

முதற்கட்ட விசாரணையில், இந்த வழக்கில் கைதான டாக்டர் நம்ரதா என்பவர் மீது இரண்டு வழக்குகள் இருப்பதாக்வும், ஒரு முறை, அமெரிக்க தம்பதி வாடகைத் தாய் முறையில் பெற்ற குழந்தை, அவர்களது குழந்தை இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டு வழக்குத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் உரிமம் ரத்து செய்யப்பட்டதும், இதுபோன்று மற்றொரு வழக்கிலும் அவரது பெயர் இடம்பெற்றிருந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.

இவர்கள் பெயரில் ஏற்கனவே மூன்று இடங்களில் பத்து வழக்குகள் பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் கருவுற்றிருக்கும் ஏழை தாய்மார்களை மூளைச்சலவை செய்து, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கி இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.