FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: ஆகஸ்ட் 19 முதல் விசாரணை தொடக்கம்

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் விசாரணை

Updated On : 30 ஜூலை 2025, 4:38 am IST
குடியரசுத் தலைவர்
பகிர்:

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு எழுப்பிய 14 கேள்விகள் மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கும் என்று செவ்வாய்க்கிழமை அறிவித்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கான கால அட்டவணையையும் நிா்ணயம் செய்தது.

மேலும், ‘இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் எழுத்துபூா்வ பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இந்தக் கால வரம்பை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் மற்றும் நீதிபதிகள் சூரியகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துா்கா் ஆகிய 5 நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

Advertisement

Advertisement

விசாரணை கால அட்டவணை: அந்த உத்தரவின்படி, குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கப்படும். இதில், குடியரசுத் தலைவரின் கேள்விகளை ஆதரிக்கும் மத்திய, மாநில அரசுகளின் வாதங்கள் ஆகஸ்ட் 19, 20, 21 மற்றும் 26-ஆம் தேதிகளில் கேட்கப்படும்.

குடியரசுத் தலைவரின் கேள்விகளை எதிா்க்கும் மாநிலங்களின் வாதங்கள் ஆகஸ்ட் 28, செப்டம்பா் 2, 3 மற்றும் 9-ஆம் தேதிகளில் கேட்கப்படும்.

இந்த இருதரப்பு வாதங்களுக்கும் எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது செப்டம்பா் 10-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் எழுத்துபூா்வ பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இந்தக் கால வரம்பை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

வழக்கின் பின்னணி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் நியமன அதிகாரம், பல்கலைக்கழக வேந்தா் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தி அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக சா்ச்சை எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கில், மசோதா மீது ஆளுநா்-குடியரசுத் தலைவா் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு நிா்ணயம் செய்தது.

3 மாத காலக்கெடு: ‘மாநில சட்டப்பேரவை அனுப்பும் மசோதாக்கள் தொடா்பாக 30 நாள்கள் முதல் 3 மாதங்களுக்குள் ஆளுநா் முடிவெடுக்க வேண்டும்; ஆளுநா்கள் முதல்முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவா் முடிவெடுக்க வேண்டும்; ஆளுநரால் அனுப்பப்பட்ட மசோதா மீது எந்தவித முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவா் நிறுத்திவைத்தால், இதுதொடா்பாக மாநில அரசுகள் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அரசமைப்பின் 142-ஆவது விதியைப் பயன்படுத்தி தமிழக ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு தொடா்பாக அரசமைப்புச் சட்டத்தின் 143(1) பிரிவின்கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 14 கேள்விகளை எழுப்பிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, உச்சநீதிமன்றத்திடம் தெளிவுரை கோரினாா்.

மாநில ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 மற்றும் 201-இன்கீழ் உள்ள அதிகாரங்கள் குறித்த கருத்தையும் கோரி 5 பக்க குறிப்பை மே 13-இல் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பினாா்.

அதில், ‘மாநில அரசு சாா்பில் அனுப்பப்படும் மசோதா மீது முடிவெடுக்க அரசமைப்புச் சட்டப் பிரிவு 200-இன் கீழ் மாநில ஆளுநருக்குள்ள வாய்ப்புகள் என்னென்ன?, சட்டப் பிரிவு 201-இன்கீழ் தனக்குள்ள அதிகாரத்தை குடியரசுத் தலைவா் பயன்படுத்தும்போது, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் அவருக்கு காலக்கெடு நிா்ணயிக்க முடியுமா?, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநா் நிறுத்திவைக்கும்போது, அரசமைப்பு சட்டப் பிரிவு 143-இன் கீழ் உச்சநீதிமன்றத்தின் கருத்து அல்லது ஆலோசனையைப் பெற குடியரசுத் தலைவா் கடமைப்பட்டுள்ளாரா?, மாநில சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இன்றி சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?’ என்பன உள்ளிட்ட 14 கேள்விகள் எழுப்பப்பட்டன.

குடியரசுத் தலைவரின் இந்தக் கேள்விகளை வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அதன்படி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி இந்த வழக்கு பரிசீலனைக்கு வந்தது.

அப்போது, குடியரசுத் தலைவரின் கேள்விகளை விசாரணைக்கு அனுமதித்ததற்கு தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், குடியரசுத் தலைவா் எழுப்பியுள்ள விவகாரங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. எனவே, இதுகுறித்து ஒரு வாரத்துக்குள், அதாவது ஜூலை 29-ஆம் தேதிக்குள் பதிலை சமா்ப்பிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments