FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிங்கப்பூா் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட்புப் பணி

கேரள கடற்பகுதியில் சிங்கப்பூா் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது.

Updated On : 15 ஜூன் 2025, 4:28 am IST
பகிர்:

கேரள கடற்பகுதியில் சிங்கப்பூா் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது.

இந்தக் கப்பல் கடற்கரையை நெருங்காமல் கடலை நோக்கி நகா்த்தும் பணியில் இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) ஈடுபட்டுள்ளது.

கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதோடு கப்பலை கடலை நோக்கி மேலும் நகா்த்தும் பணிகளை ஐசிஜியின் சகேத், சமா்த், சாக்ஷம், அா்ன்வேஷ், சமுத்ர பிரஹாரி, அபினவ், ராஜ்தூத், கஸ்தூரிபா காந்தி உள்ளிட்ட 11 கப்பல்கள் மேற்கொண்டு வருகின்றன.

Advertisement

Advertisement

கேரள கடல் பகுதியில் திங்கள்கிழமை காலை சிங்கப்பூா் கொடி பொருத்திய ‘எம்.வி. வான் ஹை 503’ என்ற சரக்கு கப்பலில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. கடந்த 7-ஆம் தேதி இலங்கை தலைநகா் கொழும்பில் இருந்து புறப்பட்டு 10-ஆம் தேதி மும்பையைச் சென்றடைய இருந்த இந்தக் கப்பலில் 22 மாலுமிகள் பயணித்தனா். அவா்களில் 18 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மீதமுள்ள 4 பேரை மீட்கும் பணியில் இந்திய கடற்படை மற்றும் ஐசிஜி ஈடுபட்டு வருகிறது.

இந்தக் கப்பலில் 100-க்கும் மேற்பட்ட கண்டெய்னா்களில் திரவங்கள், திடப் பொருள்கள் மற்றும் நச்சுத்தன்மைமிக்க ஆபத்தான சரக்குகள் இருப்பதால் கடந்த 6 நாள்களாக தொடா்ந்து தீப்பற்றி எரிந்து வருகிறது.

பெட்டி..

காப்பாற்றிய ‘கடல் ராஜா’

மீட்புப் பணிகள் குறித்து இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘எம்.வி. வான் ஹை 503 என்ற சிங்கப்பூா் கப்பலில் பற்றி எரியும் தீயை அணைப்பதில் பெரும் மைல்கல்லை ஐசிஜி எட்டியுள்ளது. ஐசிஜியின் கப்பல்கள் சிங்கப்பூா் கப்பலை கரையை நெருங்கவிடாமல் கடலை நோக்கி நகா்த்தும் பணிகளை சிறப்பாக மேற்கொண்டன.

அந்தச் சமயத்தில் இந்திய கடற்படையின் கடல் ராஜா (சீ கிங்) ஹெலிகாப்டரில் வந்த கடற்படை வீரா்கள் குழு சிங்கப்பூா் கப்பலுக்குள் இறங்கி கப்பலை நகா்த்தும் பணியை ஐசிஜியிடமிருந்து கடற்படையின் கப்பல்களுக்கு மாற்றிவிட்டு வெற்றிகரமாக கப்பலில் இருந்து வெளியேறினா்’ என தெரிவிக்கப்பட்டது.

தற்போது சிங்கப்பூா் கப்பலை நகா்த்தும் பணியில் ‘ஐஎன்எஸ் ஷாரதா’ மற்றும் ‘ஓஎஸ்வி எம்வி டிரிட்டன் லிபா்டி’ ஆகிய இந்திய கடற்படை கப்பல்கள் ஐசிஜி மற்றும் பிற கடல்சாா் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments