முகப்பு
இந்தியா

காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டை: 9 பேர் கைது!

காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 10 நவம்பர் 2025, 3:55 am IST
பயங்கரவாதிகளைக் கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படையினர்
பகிர்:

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் உளவுப் பிரிவு போலீஸார் நடத்திய பயங்கரவாதத்துக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக ஸ்ரீநகரில் ஜம்மு}காஷ்மீர் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதத்தைப் பரப்பவும், இளைஞர்களை மூளைச்சலவை செய்யவும் பயங்கரவாதிகள் முயற்சி செய்வதாக நம்பகமான உளவுத்தகவல் போலீஸாருக்கு கிடைத்தது.

இதையடுத்து ஸ்ரீநகர், குல்காம், பாராமுல்லா, ஷோபியான், புல்வாமா ஆகிய நகரங்களில் உள்ள 10 குறிப்பிட்ட இடங்களில் உளவுப் பிரிவு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

Advertisement

Advertisement

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் இந்த வேட்டை நடத்தப்பட்டது.

சமூக ஊடகங்கள் மூலம் வன்முறையைப் பரப்ப முயற்சித்தவர்கள், தேசவிரோத பிரசாரத்தை மேற்கொள்வோர், மத ரீதியிலான வெறுப்பைப் பரப்ப முயற்சிப்போர் ஆகியோரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில் ஒரு பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து சிம் கார்டுகள், கைப்பேசிகள், டேப்லட் கணினிகள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை போலீஸாரின் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மின்னணு சாதனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களை வேரறுத்து காஷ்மீரின் பொது ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு நாங்கள் உறுதிபூண்டிருப்பதை இந்த தேடுதல் நடவடிக்கை உணர்த்துகிறது.

மேலும், ஆன்லைன் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத எண்மமய செயல்கள் ஆகியவற்றுக்கு எதிரான தீவிர போராட்டத்துக்கான தொடக்கமே இந்த நடவடிக்கையாகும்.

தொடர்ச்சியாக நடைபெற உள்ள இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேலும் பல இடங்களில் அதிரடிச் சோதனையும் கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை நிலைநாட்டவும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் பிடியில் சிக்காமல் காஷ்மீர் இளைஞர்களைக் காக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்றார் அவர்.

ஜம்மு பிராந்தியத்திலும் தேடுதல் வேட்டை: ஜம்முவில் பயங்கரவாதிகளுக்கான தேடுதல் வேட்டை குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில் "ஜம்மு பிராந்தியத்தின் ராம்பான், கிஷ்த்வார், தோடா, கதுவா, ரியாசி, பூஞ்ச், ரஜௌரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளைக் குறிவைத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தப் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. தோடா மாவட்டத்தில் சந்தேகத்துக்குரிய நபர்கள் பலரும் விசாரணைக்காக போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்' என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.