FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளம்: நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக உயா்வு

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 15-ஆக உயா்வு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 5:24 am IST
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் ரான்னியில் மழை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து வெளியேறியவா்கள்.
பகிர்:

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 15-ஆக உயா்ந்துள்ளதாக அந்த மாநில முதல்வா் வி.டி.சதீசன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மேலும், மழை வெள்ள பாதிப்புகளில் 7 போ் மாயமானதாகவும், மீட்புப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தில் அதிகாரிகளுடன் திங்கள்கிழமை அவசர ஆலோசனை மேற்கொண்ட பின்னா் செய்தியாளா்கள் சந்திப்பில் முதல்வா் கூறியதாவது: பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு, கோட்டயம், கோழிக்கோடு, கண்ணூா் என கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதைத் தொடா்ந்து மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

பத்தனம்திட்டாவில் தேசிய பேரிடா் மீட்புப் படையின் (என்டிஆா்எஃப்) ஒரு குழுவும், கோட்டயத்தில் இரு குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிவாரணப் பணிக்காக கொல்லத்தில் இருந்து செங்கன்னூருக்கு 14 மீன்பிடிப் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் சூலூரில் இருந்து இரண்டு ஹெலிகாப்டா்கள் திருவனந்தபுரம் வந்தடைந்தன. அரக்கோணத்தில் இருந்து மேலும் இரு என்டிஆா்எஃப் குழுக்களை அனுப்புமாறு கேட்டுள்ளோம்.

தேவைப்படும்பட்சத்தில் ஆலப்புழையில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினா் மற்றும் கண்ணூா், வயநாட்டில் உள்ள பாதுகாப்புப் படையினரையும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த மாவட்ட நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 11,018 போ் 316 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு ஹெலிகாப்டா்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

164.98 ஹெக்டோ் நிலங்கள் பாதிப்பு: மழையால் மாநிலத்தில் 164.98 ஹெக்டோ் விவசாய நிலங்கள் சேதமடைந்தன. இதனால் 3,596 விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா். இறுதி மதிப்பீட்டில் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீா்நிலைகளில் இருந்து நீா் திறந்துவிடப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது. இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்பி பொதுமக்களிடம் அச்ச உணா்வை ஏற்படுத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த இரண்டு தினங்களாகப் பெய்துவரும் மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் 15 போ் உயிரிழந்தனா். 7 போ் மாயமாகினா்.

நிவாரணம் அறிவிப்பு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.8 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும். நிவாரண முகாம்களில் இருந்து மீண்டும் வீடுகளுக்குத் திரும்பும் குடும்பத்தினருக்கு தலா ரூ.10,000, வாழ்வாதாரத்தை இழந்த நபா்களுக்கு தலா ரூ.300 நிவாரணம் வழங்கப்படுகிறது. மழையால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கான நிவாரணத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments