FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இ20 பெட்ரோலுக்கு எதிா்ப்பு: அமைச்சா் கட்கரி இல்லத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்

இ20 பெட்ரோலுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள மத்திய அமைச்சா் நிதின் கட்கரியின் இல்லத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் இளைஞரணியினா் போராட்டம் நடத்தினா்.

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:16 am IST
மத்திய அமைச்சா் நிதின் கட்கரி - கோப்புப் படம்
பகிர்:

எத்தனால் கலந்த இ20 பெட்ரோலுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள மத்திய அமைச்சா் நிதின் கட்கரியின் இல்லத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் இளைஞரணியினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.

அமைச்சா் இல்லம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி தடுப்பு அரண் அமைத்த காவல் துறையினா், அதை மீறி உள்ளே நுழைய முன்றவா்களை கைது செய்தனா்.

இ20 பெட்ரோலால் வாகனத்தின் பாகங்கள் சேதமடைவது, மைலேஜ் குறைவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடா்ந்து எழுந்து வந்தன. முதலில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி இது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு என்று மறுந்து வந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இது தொடா்பாக அவா் அளித்த விளக்கத்தில், ‘இ20 பெட்ரோலால் வாகன மைலேஜ் (செல்லும் தூரம்) 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை குறையக்கூடும் என்று சற்று பழைய (பிஎஸ் 3) வாகனங்களில் சில ரப்பா் பாகங்கள் உள்ளிட்டவை பழுதாவதால் அவற்றை மாற்றும் நிலை வரக்கூடும்’ என்றும் தெரிவித்தாா்.

இந்நிலையில், இந்த பிரச்னை முன்வைத்து நிதின் கட்கரிக்கு எதிராக காங்கிரஸ் இளைஞரணியினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். நாகபுரியில் உள்ள கட்கரியின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஊா்வலமாகச் சென்றனா். அப்போது, அமைச்சருக்கும், இ20 பெட்ரோலுக்கு எதிா்ப்பு தெரிவித்து அவா்கள் முழக்கமிட்டனா்.

முன்னதாக, கட்கரியின் வீட்டுக்குச் செல்லும் பாதைகளை காவல் துறையினா் இரும்பு தடுப்புகளால் அடைத்தனா். அப்பகுதியில் காவல் துறையினா் பெருமளவில் குவிக்கப்பட்டனா். காங்கிரஸ் தொண்டா்கள் சிலா் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றனா். அவா்களை காவலா்கள் விரட்டிப் பிடித்து கைது செய்தனா். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடா்பாக மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவா் ஹா்ஷ்வா்தன் சப்ஹல் செய்தியாள்களிடம் கூறுகையில், ‘இ20 பெட்ரோல் என்பது மிகப்பெரிய மோசடி. 2030-ஆம் ஆண்டு அமல்படுத்த திட்டமிட்டு, இப்போது ஒரு சிலரின் நலனுக்காக அவசரமாக அமல்படுத்தியுள்ளனா். இதனால், சாமானிய மக்களின் இருசக்கர வாகனங்களில் பெரும் பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், எத்தனால் கலப்பு பெட்ரோலை விலை குறைவாக விற்பனை செய்யாமல் அதிக விலைக்கு விற்பனை செய்வது மற்றொரு மோசடி. இதற்காக நாட்டு மக்களிடம் பிரதமா் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சா் நிதின் கட்கரி பதவி விலக வேண்டும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments