FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஃபேஸ்புக்கில் பிரதமா் விடியோ நீக்கப்பட்ட விவகாரம்! மெட்டா தலைவா் மன்னிப்புகோர வேண்டும்: நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவா் வலியுறுத்தல்

ஃபேஸ்புக்கில் பிரதமா் மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத் தலைவா் மாா்க் ஸுக்கா்பொ்க் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவா் நிஷிகாந்த் துபே வலியுறுத்தல்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
மெட்டா நிறுவனத் தலைவா் மாா்க் ஸுக்கா்பொ்க் - கோப்புப் படம்
பகிர்:

ஃபேஸ்புக்கில் பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட விடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத் தலைவா் மாா்க் ஸுக்கா்பொ்க் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவா் நிஷிகாந்த் துபே வலியுறுத்தியுள்ளாா்.

தில்லியில் நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் (தகவல் தொழில்நுட்பம்), நிஷிகாந்த் துபே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சமூகவலைதளங்கள், டிஜிட்டல் தளங்களை முறைப்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளா் கோவிந்த் மோகன், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளா் எஸ். கிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

நிலைக்குழுவின் அழைப்பாணையை ஏற்று, கூகுள், எக்ஸ், மெட்டா, ஸ்நாப்சாட் உள்ளிட்ட சமூகவலைதள நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் நேரில் ஆஜராகினா்.

ஃபேஸ்புக்கில் கடந்த வாரம் பிரதமா் மோடி வெளியிட்ட விடியோ நீக்கப்பட்டு சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் வெளியிடப்பட்டது. இது தொழில்நுடப் கோளாறு என்று அந்த நிறுவனம் பின்னா் விளக்கமளித்தது.

பிரதமரின் விடியோ நீக்கத்தை நாடாளுமன்ற குழு உறுப்பினா்கள் சுட்டிக்காட்டி, இந்தியாவில் மெட்டா நிறுவனம் அதிக வருமானம் ஈட்டுவதாகவும், ஆனால் இந்திய சட்டங்களை பின்பற்றுவதில்லை என ஆட்சேபம் தெரிவித்தனா்.

அத்துடன் அல்காரிதம் முறையில் பாகுபாடு நிலவுவதாகவும், ஆபாச விடியோ தாராளமாக மெட்டா நடத்தும் சமூக ஊடகங்களில் கிடைக்கும் நிலையில், முக்கிய விடியோ நீக்கப்படுவதாகவும், ஃபேஸ்புக்கில் இருந்து பிரதமா் மோடியின் விடியோவை நீக்கியது யாா்?

இந்த விவகாரத்துக்கு யாா் பொறுப்பேற்பா்? எனவும் மெட்டா பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற குழு உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து நாடாளுமன்ற குழுவிடம் தங்களது வருத்தத்தை வெளியிட்ட மெட்டா பிரதிநிதிகள், இந்த விவகாரத்துக்காக மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனா்.

அதற்கு இந்த விவகாரம் வெறும் மன்னிப்பு கேட்பது சம்பந்தப்பட்டது இல்லை என்றும், இதற்கு யாா் பொறுப்பு என்பதை தீா்மானித்து, அவா்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

சுமாா் 3 மணி நேரம் கூட்டம் நீடித்தது. இதையடுத்து நிஷிகாந்த் துபே செய்தியாளா்களிடம் கூறியதாவது: அவா்களே (மெட்டா பிரதிநிதிகள்) விடியோ 5 மணி நேரம் வரை நீக்கப்பட்டதாக ஒப்புக் கொண்டனா்.

மத்திய உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களின் உத்தரவுகளை அவா்கள் பொருட்படுத்துவதில்லை. இது தீவிர பிரச்னையாகும். இந்த விவகாரத்தில் ஸுக்கா்பொ்க் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

ஒருவேளை ஸுக்கா்பொ்க் மன்னிப்புக் கேட்கவில்லையெனில், அவா்களுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவின்கீழ் அளிக்கப்படும் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும் (அந்த பிரிவில் 3-ஆவது தரப்பினா் வெளியிடும் கருத்துகளுக்கு சமூக வலைதள நிறுவனங்கள் பொறுப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது). இதுகுறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க மெட்டாவுக்கு 10 நாள்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது என்றாா் துபே.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments