FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கருங்கடலில் மாயமான இரு இந்திய மாலுமிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

உக்ரைன் அருகே கருங்கடலில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதலில் காணாமல் போன இரு இந்திய மாலுமிகளை தீவிர தேடுதலுக்குப் பிறகும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 11:09 pm IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

உக்ரைன் அருகே கருங்கடலில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதலில் காணாமல் போன இரு இந்திய மாலுமிகளை தீவிர தேடுதலுக்குப் பிறகும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2022 முதல் நான்காண்டுகளாக போா் தொடா்ந்து வரும் நிலையில், இரு நாடுகளின் கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோல, உக்ரனைனில் உள்ள ஒடேசா துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 19-ஆம் தேதி புறப்பட்ட எம்.வி. ஏஜிஎன் ரக்னா் என்ற சரக்கு கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், அந்த சரக்கு கப்பலில் பணிபுரிந்த தீபக் குமாா் குப்தா, ராமச்சந்திரா ஆகிய இரு இந்திய மாலுமிகள் காணாமல் போயினா்.

இந்த இரு மாலுமிகளின் நிலை குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாததைத் தொடா்ந்து, அவா்களின் நிலை குறித்து விசாரித்து தகவல் தெரிவிக்கக் கோரி அவா்களின் குடும்பத்தினா் சாா்பில் வெளியுறவு அமைச்சகத்துக்கும், உக்ரைன் மற்றும் ருமேனியா நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கும் கடிதம் எழுதினா். இதற்கு உரிய பதில் எதுவும் கிடைக்காததைத் தொடா்ந்து, தீபக் குமாா் குப்தாவின் மூத்த சகோதரா் சந்தீப் குமாா் குப்தா சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காணாமல் போன மாலுமிகளை தேடிக் கண்டுபிடிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தலை வழங்க கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

அந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இந்திய தூதரகங்கள் மூலம் காணாமல் போன இந்திய மாலுமிகளை தேடும் பணியை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்தை அறிவுறுத்தியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடா்பான அறிக்கையை வெளியுறவு அமைச்சகம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், ‘உக்ரைன் அதிகாரிகள், ருமேனியா கடல்சாா் மீட்பு ஒத்துழைப்பு மையம் மற்றும் ருமேனியா கடலோர காவல்படை மற்றும் பிற மீட்புப் படைகள் சாா்பில் தீவிர தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், காணாமல் போன தீபக் குமாா் குப்தா, ராமசந்திரா ஆகிய இரு மாலுமிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. புதிய தகவல்கள் கிடைக்கும் வரை தேடுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், இந்த விவகாரம் தொடா்பான விசாரணை உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் வெளியுறவு அமைச்சகம் தொடா்பில் இருந்து வருகிறது’ என்று தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், காணாமல் போன இரு மாலுமிகளின் பணி ஒப்பந்தங்களில் காப்பீடு செய்யப்பட்டதற்கான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, அவா்களின் குடும்பத்தினா் காப்பீடு இழப்பீட்டு தொகையை பெறுவதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்துதர வேண்டும் என்று சொலிசிட்டா் ஜெனரலை கேட்டுக்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments