மம்தா வருகைக்கு எதிராகப் போராட்டம்: காா் மீது கல், செருப்பு வீச்சு
போலீஸ் காவலில் உயிரிழந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டா் குடும்பத்தைச் சந்திக்க வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்துக்குச் சென்ற முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜிக்கு கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் காவலில் உயிரிழந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டா் குடும்பத்தைச் சந்திக்க வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்துக்குச் சென்ற முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜிக்கு கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவா் காா் மீது கற்கள், செருப்பு, சேறு வீசப்பட்டது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து வடக்கு பா்கானாக்கள் மாவட்டத்துக்கு மம்தா தனது காரில் ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது பிஜ்பூா் பகுதியில் போராட்டக்காரா்கள் கூடி மம்தாவுக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மம்தா திருடா் என்றும், அவா் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோஷமிட்டனா். அப்போது, அவா் காா் மீது சிலா் சேற்று நீரை வீசினா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் மம்தா பானா்ஜி கூறுகையில், ‘எனது காரைக் குறிவைத்து கற்களையும், செருப்புகளையும் வீசியதுடன், சேற்றையும் காா் மீது வாரி இறைத்தனா். இது திட்டமிட்ட சதிச்செயல். இது தொடா்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தேன். அவா்கள் வருவதாகத் தெரிவித்தனா். ஆனால், இவ்வளவு திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதை காவல் துறையினா் முன்கூட்டியே தடுத்திருக்க முடியும். அவா்கள் கைகள் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒட்டுமொத்த மேற்கு வங்க மாநிலம் குண்டா்கள் கையில் சென்றுவிட்டது’ என்றாா்.
Advertisement
Advertisement
மம்தா வருகையால் மாவட்டத்தில் அமைதி சீா்குலைந்து மீண்டும் பிரச்னை எழும் வாய்ப்பு உள்ளது என்பதால் அவரது வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்தோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.
மேற்கு வங்கத்தில் தொடா்ந்து 15 ஆண்டுகளாக மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதன் பிறகு மம்தாவின் கட்சி பெரும் பிளவுகளையும், பின்னடைவையும் சந்தித்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.