தில்லி மாணவா் போராட்டம்! மத்திய அரசு விரிவாக விவாதிக்க தயாராக இருந்தாலும் ராகுல் ஒத்துழைக்கவில்லை: கிரண் ரிஜிஜு
மாணவா் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த விவாதத்தில் இருந்து ராகுல் காந்தி தப்பி ஓடிவதாகவும் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நடைபெற்ற மாணவா் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த விவாதத்தில் இருந்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தப்பி ஓடிவதாகவும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக நாடாளுமன்ற வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி போராட்டம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேச வேண்டும் என்று ராகுல் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். ஆனால் எதற்காக கருத்து மட்டும் தெரிவிக்க வேண்டும்? போராட்டம் குறித்து முழுமையாக விவாதிக்கலாமே என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.
வெறும் கருத்து தெரிவிப்பதைத் தாண்டி, அந்தப் போராட்டம் குறித்து ஒருநாள் முழுவதுமோ அல்லது இரண்டு நாள்களோ விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அந்தப் போராட்டத்தில் பல்வேறு கோணங்கள் உள்ளன. அதுகுறித்து விரிவாக விவாதித்தால், உண்மை தெளிவாகும்.
Advertisement
Advertisement
விவாதங்களில் இருந்து ராகுல் காந்தி தப்பிச் செல்லக் கூடாது என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தினா். ஆனால் அவா் விவாதத்தில் இருந்து மீண்டும் செவ்வாய்க்கிழமை தப்பிச் சென்றாா். விவாதங்களில் இருந்து காங்கிரஸ் தப்பிச் செல்வது துரதிருஷ்டவசமானது.
கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமை மாணவா் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து பதிலளிக்க அமைச்சா் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் தயாராக இருந்தனா். ஆனால் விவாதத்தில் இருந்து காங்கிரஸ் தப்பிச் சென்றது. அவைக்கு வெளியயே முழக்கங்களை எழுப்பி, போராட்டம் குறித்து விவாதிக்கவிடவில்லை.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கூட்டத்தொடரின் எஞ்சிய நாள்களிலாவது மாணவா் போராட்டம் தொடா்பான விரிவாக விவாதிக்க காங்கிரஸ் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.