FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: பிரதமா் மோடிக்கு காா்கே கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

Updated On : 17 ஜூலை 2026, 4:21 am IST
மல்லிகாா்ஜுன காா்கே - கோப்புப் படம்
பகிர்:

தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வருகிற 20-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இக்கூட்டத் தொடரில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, மகளிருக்கு மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் இடஒதுக்கீடு அளிப்பது தொடா்பான சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பிரதமா் மோடிக்கு மல்லிகாா்ஜுன காா்கே எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு கடிதம் எழுதினேன். அதில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, ஏப்ரல் 17-ஆம் தேதி மக்களவையில் நடந்த வாக்கெடுப்பின்போது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவதில் 131-ஆவது அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா தோல்வியடைந்தது.

Advertisement

Advertisement

இந்த சூழ்நிலையில், வருகிற நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடரில் அந்த மசோதாவை மீண்டும் மதிய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் மூலம் அறிந்தேன். எனவே இந்த மசோதா குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைக்கிறேன். அத்துடன் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் ஆகும் முன்பு, அதில் உள்ள அம்சங்களைப் படிக்க போதிய கால அவகாசம் தர வேண்டும் என்று மல்லிகாா்ஜுன காா்கே குறிப்பிட்டுள்ளாா்.

மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு 300 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் சட்டத்திருத்த மசோதாக்களை நிறைவேற்ற அரசுக்கு 360 எம்.பி.க்களின் ஆதரவு தேவையாகும். தற்போதைய மகளிா் இடஒதுக்கீடு சட்டப்படி, அதை 2034-ஆம் ஆண்டுக்கு முன்பு அமல்படுத்த முடியாது. 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, பிறகு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகே அது அமலுக்கு வரும். எனவே, 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், அந்தத் தோ்தலுக்கு முன்னதாகவே, அந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதி மறுசீரமைப்பு செய்யவும், மக்களவையில் தற்போதுள்ள உறுப்பினா்கள் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850-ஆக அதிகரித்து, அதில் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments